ஒரு நாட்டின் குடியுரிமை பெறுவதற்கு அந்தந்த நாடுகளின் சட்டப்படி பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதே போல் அர்ஜெண்டினாவில் கடைபபிடிக்கப்படும் நடைமுறைகளில் ஒன்று அந்நாட்டில் யாராவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்தக் குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கி விடுகிறது. இதை யார் பயன்படுத்திக் கொள்கிறார்களோ இல்லையோ, ரஷ்யாவைச் சேர்ந்த கர்ப்பிணிகள் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கான ரஷ்ய கர்ப்பிணிப் பெண்கள் அர்ஜெண்டினாவில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் என விசா பெற்றுக்கொண்டு அங்கு செல்லும் நிறைமாத கர்ப்பிணிகள் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்களாம். இது அர்ஜெண்டினா நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது.
அர்ஜெண்டினாவில் குழந்தை பெற்றுக்கொள்ளவதன் மூலம் அந்நாட்டு பாஸ்போர்ட்டை பெற முடியும் என்பதற்காக அவர்கள் அங்கு செல்வதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இது போன்ற நுழைவுகளை கண்காணிக்கவும் தடுக்கவும் அந்நாட்டு குடியுரிமை துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வாரம் அர்ஜெண்டினாவிற்குள் நுழைய முயன்ற 6 ரஷ்ய கர்ப்பிணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் என்று அவர்கள் பொய் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் சிலர், அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வழக்கில் ஆறு பெண்களும் அர்ஜெண்டினாவிற்குள் நுழைய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் யாரும் குற்றவாளிகள் இல்லை என்றும் அவர்களின் சுதந்திரம் சட்டவிரோதமாக பறிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்கிறார் அந்நாட்டு தேசிய குடியுரிமை இயக்குநர் ஃபுளாரன்சியோ க்ளாரிக்நானோ. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் ஒரே விமானத்தில் 33 ரஷ்ய கர்ப்பிணிகள் வந்ததுள்ளனர் எனக் கவலையோடு தெரிவிக்கிறார் அதிகாரி ஒருவர். சென்ற ஆண்டு, 21,757 ரஷ்யர்கள் அர்ஜெண்டினாவிற்குள் நுழைந்துள்ளதாகவும் அவர்களில் கிட்டத்தட்ட 10,500 பேர் கர்ப்பிணிகள் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இது போன்ற வருகை அதிகரித்துள்ளது. சென்ற மூன்று மாதத்தில் 5,819 கர்ப்பிணிகள் அர்ஜெண்டினாவிற்குள் வந்துள்ளனர் என கூறுகிறார் அர்ஜெண்டினா அதிகாரி ஒருவர்.
அர்ஜெண்டினாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக அர்ஜெண்டினா குடியுரிமை கிடைப்பதோடு, அவர்கள் மூலம் பெற்றோரும் அந்நாட்டு குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் அர்ஜெண்டினாவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் நபர்கள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கோடு இது போன்ற நுழைவுகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Argentina, Citizen, Pregnant, Russia - Ukraine