உக்ரைனின் மரியுபோல் நகரின் மீது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ரஷ்ய தாக்குதலில் 1,300 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனின் தென் கிழக்கு பகுதியில் உள்ளது துறைமுக நகரம் மரியுபோல். இந்த நகரை கைப்பற்ற கடந்த சில நாள்களாக ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு 4 லட்சம் பேர் வசித்து வரும் நிலையில், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருவதாக மரியுபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.குடியிருப்பு கட்டடங்கள் மீது ரஷ்ய போர் விமானங்கள் தாக்குதல் நடத்துவதாகவும், இதனால் கடந்த இரண்டு நாள்களாக மரியுபோலை விட்டு மக்கள் வெளியேற முடியவில்லை எனவும் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரின் வடக்குப்பகுதி நுழைவு வாயிலான வோல்னோவாகாவை பிரிவினைவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ரஷ்யா தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாகவும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலின் விளைவாக பத்து நாள்களில் 1,300 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. போரில் இறந்தவர்களின் சடலங்களை பெரிய குழிகளில் ராணுவ வீரர்கள் ஒன்றாக புதைத்து வருகின்றனர்.
கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கியமான தொழில்துறை நகரமான டினிப்ரோ மீது மூன்று முறை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மழலையர் பள்ளி மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் தாக்குதலுக்கு ஆளாகின. ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு மத்திய உக்ரைனில் நகர் மீது நடத்தப்பட்ட முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.
உக்ரைன் தலைநகர் கீவ்- அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய படைகள் தரைவழி தாக்குதல் நடத்த ஏதுவாக கலைந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் மக்சர் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டிருந்த செயற்கைகோள் படத்தில் 64 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுந்து நின்றுக் கொண்டிருந்தன.
இதனிடையே மரியுபோல் நகர குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 41 குழந்தைகள் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதல் தற்போது வரை 25 லட்சம் பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.