ஆடையில் வெள்ளை ரிப்பன் இல்லாதவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் இதனை அணிந்து கொண்டு தாங்கள் ராணுவத்தினர் இல்லை என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் 3வது மாதத்தை நெருங்கி வருகிறது. போரால் இரு தரப்புக்கு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும் இரு நாடுகளும் தொடர்ந்து போரிட்டு வருவதால் இதுவரையில் 40 லட்சம்பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
வல்லரசு நாடான ரஷ்யா தற்போதுவரையில் மிக ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தாமல் தரை வழி தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலை ரஷ்ய ராணுவம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதையும் படிங்க - இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்-அதிர்ச்சியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!
இங்கு உக்ரைன் ராணுவமும் மரியுபோல் நகரை மீட்பதற்கு சண்டையிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் யார், ராணுவத்தினர் யார் என்ற குழப்பம் ரஷ்ய ராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் தங்களது ஆடையில் வெள்ளை ரிப்பனை கட்டிக் கொள்ள வேண்டும் என்றும், வெள்ளை ரிப்பன் இல்லாதவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.
இதையும் படிங்க - Sri lanka: இலங்கையில் உச்சகட்ட பதற்றம்.. போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு... மூவர் பலி
தரைப்படை தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து கொரில்லா முறையில் மறைந்திருந்து உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஸ்னைப்பர் எனப்படும் துல்லியமாக சுடும் வீரர்கள் ரஷ்ய ராணுவத்திற்கு சவாலாக இருக்கின்றனர்.
இதற்கிடையே பதிலடி கொடுப்பதை நிறுத்தி விட்டு மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவத்தினர் சரண் அடைய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நேற்று முன்தினம் ரஷ்யா எச்சரிக்கை செய்தது.
ரஷ்ய ராணுவத்தினர் சிலரை உக்ரைன் ராணுவம் சிறைபிடித்து வைத்துள்ளது. அவர்களை விடுவிக்க தயார் என்றும், பதிலுக்கு மரியுபோல் நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேற ரஷ்யா அனுமதிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார்.
சுமார் ஒரு லட்சம் பேர் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் மரியுபோல் நகரில் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.