உக்ரைன் தலைநகர் கீவ் அருகே குவியல் குவியலாய் பிணங்கள் சிதறி கிடந்தது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 39 நாட்களாக அந்நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் மூர்க்கதனமான தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவமும் ரஷ்ய வீரர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
இதனை தொடர்ந்து அங்கு உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். அப்போது பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் தெருக்களில் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். புச்சா நகரிலுள்ள ஒரு தெருவில் 20 ஆண்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. அவர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக புச்சா நகர மேயர் தெரிவித்திருந்தார். 300 உடல்களை ஒரே இடத்தில் புதைத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும் இர்பின் பகுதியில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்நகர அதிகாரிகள் தெரிவித்தனர். உடல்கள் சிதறிக் கிடக்கும் காட்சிகளை கண்டு தான் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியதாகவும், படுகொலைகள் குறித்து சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இந்த படுகொலைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நிராயுதபாணியாக இருந்த பொதுமக்களை ரஷ்ய துருப்புக்கள் தூக்கிலிட்டதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அந்நாட்டின் மீதான தடைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என ஐநா சபை பொதுக் கூட்டத்தில் வலியுறுத்த உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனிடைய புச்சாவில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.