அணுஆயுதத்தை பயன்படுத்துவதாக ரஷ்யா அச்சுறுத்தி வருவது அதிர்ச்சி அளிப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் குறித்து ஆலோசிக்க ஐநா பொதுச்சபையின் 11-வது சிறப்பு அவசரக் கூட்டம், அமெரிக்காவில் உள்ள தலைமையகத்தில் இந்திய நேரப்படி நேற்றிரவு 8.30 மணிக்கு நடைபெற்றது. இதில் 193 நாடுகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் போரில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்கள், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த விரும்புவதாகத் தெரிவித்தார். உக்ரைன் நாடு தற்போது பெரிய ஆபத்தை சந்தித்து வருவதாக குறிப்பிட்ட அவர், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு அனைத்து உதவிகளையும் ஐநா செய்யும் என்றும், உக்ரைனை ஐநா கைவிடாது என்றும் உறுதியளித்தார்.
ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றிபெறும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். பிரச்னைக்கு தீர்வு காணவே ஐநா விரும்புவதாகவும், பிரச்னையை மேலும் மோசமாக்க விரும்பவில்லை என்றும் பேசினார்
இந்தக் கூட்டத்தில் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி திருமூர்த்தி, ரஷ்யா-உக்ரைன் போரில் அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்றார். ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண இந்திய அரசு விரும்புவதாக கூறினார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அனைத்து வழிகளையும் இந்தியா மேற்கொண்டு வருவதாகவும், உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்தியர்களுக்கு அனுமதி அளித்த உக்ரைனின் அண்டை நாடுகளுக்கும் திருமூர்த்தி நன்றி தெரிவித்தார்.
Also raed... Russia-Ukraine War: உக்ரேனுக்குள் 40 மைல் தொலைவுக்கு அணிவகுத்து செல்லும் ரஷ்ய ராணுவம் - போரை தீவிரப்படுத்த திட்டம்
இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்வின் வடக்குப்பகுதி எல்லையில் ரஷ்யாவின் ராணுவ வாகனங்கள் பல மைல் தூரத்துக்கு அணிவகுத்துள்ளன. மக்சார் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களில், ரஷ்ய போர் வாகனங்கள் பெலாரஸ் மற்றும் கீவ் அருகே வரிசைகட்டி நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஹெலிகாப்டர் படையினரும் தயார் நிலையில் இருப்பது புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Russia - Ukraine, UN