உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை இந்த விவகாரம் தொடர்பாக நிகழ்ந்த சம்பவங்களை பார்க்கலாம்.
நவம்பர் 10, 2021
செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருவது கண்டறியப்பட்டது.
நவம்பர் 28, 2021
எல்லையில் ஒரு லட்சம் படை வீரர்கள், ராணுவ டாங்குகளை ரஷ்யா குவித்திருப்பதாக உக்ரைன் தெரிவித்தது.
டிசம்பர் 7, 2021
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்தார்.
டிசம்பர் 17, 2021
கிழக்கு ஐரோப்பா மற்றும் உக்ரைனில் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நேட்டோ கூட்டமைப்பு நிறுத்த வேண்டும் என்றும், உக்ரைனையோ அல்லது மற்ற முன்னாள் சோவியத் நாடுகளையோ நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா கோரிக்கை விடுத்தது.
ஜனவரி 3, 2022
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் பைடன் உறுதியளித்தார்.
ஜனவரி 10, 2022
ஜெனிவாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நேட்டோ தொடர்பான கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்தது.
ஜனவரி 17, 2022
பெலாரஸில் ரஷ்ய ராணுவம் போர் ஒத்திகையை தொடங்கியது. வெளிப்புற ஆக்கிரமிப்பை முறியடிப்பதை இலக்காகக் கொண்டு பயிற்சி நடைபெறுவதாக ரஷ்யா தெரிவித்தது.
ஜனவரி 24, 2022
படைகளை தயார் நிலையில் வைத்த நேட்டோ, கிழக்கு ஐரோப்பாவில் கூடுதல் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுடன் தனது ராணுவ பலத்தை வலுப்படுத்தியது. அமெரிக்கா 8,500 வீரர்களை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டது.
ஜனவரி 25, 2002
6000 வீரர்கள், 60 விமானங்களுடன் கிரிமியாவில் போர் பயிற்சியை நடத்தியது ரஷ்யா'
ஜனவரி 27, 2022
பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்தார். அதே நேரம் ரஷ்யாவின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சீனா அமெரிக்காவிடம் வலியுறுத்தியது.
ஜனவரி 28, 2022
ரஷ்யாவின் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்றும், ஆனால் தொடர்ந்து பேச தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். போர் தொடர்பான மேற்கத்திய நாடுகளின் கருத்துகள் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால் பீதி கிளப்ப வேண்டாம் என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.
பிப்ரவரி 1, 2022
ரஷ்யா படையெடுக்கும் என்ற அமெரிக்காவின் கூற்றை மறுத்தார் புதின்
பிப்ரவரி 2, 2022
கிழக்கு ஐரோப்பிய பகுதியில் நேட்டோ படைகளை வலுப்படுத்த 3000 வீரர்களை அமெரிக்கா அனுப்பியது.
பிப்ரவரி 6, 2022
ஒரு போரை நிகழ்த்துவதற்கான 70 சதவீத கட்டமைப்புகளை ரஷ்யா நிறுவியுள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியானது.
பிப்ரவரி 8, 2022
மாஸ்கோவில் புதினை சந்தித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் நெருக்கடியை ரஷ்யா அதிகரிக்காது என்று தெரிவித்தார்.
பிப்ரவரி 10, 2022
ரஷ்யா, பெலாரஸ் இணைந்து 10 நாள் போர் பயிற்சியை தொடங்கின. அதே சமயம் இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் லிஸ் டிரஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பிப்ரவரி 12, 2022
பைடனும் புதினும் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் பரஸ்பரம் குற்றம் சாட்டியதால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை
பிப்ரவரி 15, 2022
உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால் அது உண்மையல்ல என்று அமெரிக்கா மறுத்தது.
பிப்ரவரி 17, 2022
ரஷ்ய ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதிகளான டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் மோதல் தொடங்கியது.
பிப்ரவரி 18, 2022
தங்கள் பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பாக ரஷ்யாவுக்கு வெளியேற்றுவதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.
பிப்ரவரி 19, 2022
கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் தங்களது வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக உக்ரைன் அறிவித்தது.
பிப்ரவரி 21, 2022
பைடனும், புதினும் சந்தித்துப் பேச சம்மதித்திருப்பதாக ஃபிரான்ஸ் தெரிவித்தது. உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
பிப்ரவரி 22, 2022
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடாக ரஷ்யா அங்கீகரித்தது.
பிரவரி 23, 2022
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தொடங்கியது.
பிப்ரவரி 24, 2022
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.