2022 பிப்ரவரி 24-ம் தேதி அதிகாலை. உக்ரைனின் வானை கிழித்துக் கொண்டு தலைநகர் கீவ்-ஐ நோக்கி ரஷ்யாவின் ராணுவ விமானங்கள் சீறிப்பாய்ந்தன. அதுவரை உக்ரைனின் எல்லைகளில் படைகளை குவித்துகொண்டிருந்த ரஷ்யா, போருக்கான காரணம் பற்றி இப்படி கூறியது: ”ரஷ்யாவின் பாதுகாப்பும், வளர்ச்சியும் புதிய உக்ரைனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாயிருப்பதால் இந்த நடவடிக்கை’ என்று தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு தொலைக்காட்சிகளில் வெளியான சற்று நேரத்திலேயே உக்ரைனின் மேற்கு, கிழக்குப் பகுதிகள் மற்றும் நட்பு நாடான பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள் மும்முனை தாக்குதலை தொடங்கின. தாக்குதலை எதிர்பார்த்திருந்த உக்ரைனும் பதிலடி கொடுக்க தொடங்கியது. அதுவரை ஆதரவுக் குரல் தந்து கொண்டேயிருந்த நேட்டோ நாடுகள் ஏனோ படைகளை மட்டும் அனுப்பத் தயங்கின. உக்ரைன், தாங்கள் கைவிடப்பட்டதை உணர்ந்தது.
“ரஷ்யாவுக்கு எதிராக தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை" என்றார் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி. மேலும், "போராட துணிவுள்ள மக்கள் ஆயுதம் ஏந்தி, தாய் மண்ணின் உரிமைக்காக ராணுவத்துடன் நில்லுங்கள்" என்றார். இப்போதுவரை தலைநகரை ரஷ்ய படைகள் கைப்பற்றவிடாமல் உக்ரைன் போராடி வருகிறது. தொடர்ந்து நீடித்து வரும் வரும் போரில் அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது. போரின் முதல் இரண்டு நாட்கள் எந்த பெரிய நாடுகளின் ஆதரவுமின்றி உக்ரைன் தீரத்துடன் போரிட்டது. ரஷ்யா வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பரப்பப்படும் வதந்திகளுக்கும் அதிபர் ஜெலன்ஸ்கியே சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பதிலளித்து வந்தார். மேலும் அண்டை நாடுகளின் ஆதரவையும் கோரினார். விளைவு? ரஷ்யாவின் மீது பொருளதார தடைகள் விதிக்கப்பட்டன. உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருப்பது வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ரஷ்யா கண்டித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களில், 11 பேர் ஆதரவாக வாக்களித்தனர். இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இருப்பினும், ரஷ்யா தன்னுடைய வீட்டோ அதிகாரம் மூலமாக இந்த தீர்மானத்தை முறியடித்தது. மேலும் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை வெளியேற்றுவதற்கான உதவியை அமெரிக்க முன்வைத்த போது அதை அவர் மறுத்து, ஆயுதம் தந்தால் போதும் என பதிலளித்தார். இந்த போரின் மூலம் 1940 க்கு பிறகு வரலாற்றில் அழிக்க முடியாத இருண்ட பக்கங்களை ரஷ்யா எழுதுகிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
யுத்ததிற்கான ஆரம்பப்புள்ளி:
சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து பிறகு தனி நாடான உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளது. அதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. ஐரோப்பாவுடன் உக்ரைன் நல்லுறவை பேணுவதும், நேட்டோவில் இணைந்தால் அமெரிக்காவின் ஊடுருவல் தங்கள் எல்லைக்கு அருகில் வந்துவிடும் என்ற அச்சமே அவை. 2008-ல் இந்த வாய்ப்பு உக்ரைனுக்கும் ,ஜார்ஜியாவுக்கும் கிடைத்தும் இணைய முடியாமல் போனது. அப்போது இதைப்பற்றி புதின் கூறிய வார்த்தைகள் மிக முக்கியாமனவை “அமெரிக்கா நமது நாட்டின் வாயிலருகே ஏவுகணைகளுடன் நிற்கிறது. இதேபோல் மெக்சிகோவிலும், கனாடாவிலும் ஏவுகணைகளை நிறுத்தினால் அமெரிக்கா எப்படி உணரும் என்றார்”. அத்தோடு உக்ரைன் ஒரு போதும் நேட்டோவில் இணையக்கூடாது என்ற உத்தராவதத்தைத் தர வேண்டும் என்றார்.
இந்த பிரச்னைகள் நீண்டகாலமாக தொடர்ந்தாலும் தற்போதைய யுத்ததிற்கான ஆரம்பபுள்ளி 21 நவம்பர் 2013 இல் உக்ரைனில் வெடித்த உள்நாட்டு நெருக்கடி. உக்ரைன் தேசம், மேற்கில் ஐரோப்பிய நாடுகளுடனும், கிழக்கில் ரஷ்யாவுடனும் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது. இதனால் மேற்கத்திய சார்பு மக்கள், கிழக்கில் ரஷ்யாவை விரும்பும் மக்கள் என இரு பிரிவுகளாக குடிமக்கள் உள்ளனர். 2010 ஆம் ஆண்டு ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியேற்றபோது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்புக்கான ஒப்பந்தத்தை நிராகரித்தார். அதை எதிர்த்து ”யூரோமைடன்” என்ற பெயரில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டன. ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தால் பொருளாதார நிலை மேம்படும் என மக்கள் கருதினர்.
ஐரோப்பாவுடனான நெருக்கமான உறவுகளை அவர்கள் கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விரும்பினர். அதிபர் யானுகோவிச்சை ஊழல்வாதியாகவும், சர்வாதிகாரவாதியாகவும், ரஷ்யாவின் கைக்கூலியாகவும் பார்த்தனர். எனவே ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தை நிராகரிப்பதற்கான அவரது முடிவு, பெரும்பாலான உக்ரைனியர்களுக்கு, ஏமாற்றத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தின.
அதைத் தொடர்ந்து, "ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்" என்ற கோரிக்கையை முன்வைத்து பலகட்ட போராட்டங்களை எதிர்ப்பாளர்கள் முன்னெடுத்தனர். யானுகோவிச் வன்முறையால் பொதுமக்களை அடக்க முயன்றார். அமெரிக்காவும் ஐரோப்பாவும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தன. போராட்டங்களை தாக்குப் பிடிக்க முடியாமல், பிப்ரவரி 2014-ல் பதவியிழந்து, ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றார் யானுகோவிச். இதற்கு பதிலடி கொடுக்க நினைத்த புதின், 2014 ஆம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி கிரைமியாவை ஆக்கிரமித்து ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டார். இதற்கான வாக்கெடுப்பு கிரைமியாவிலேயே நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து 2014 ஏப்ரலில், ரஷ்யாவிற்கு ஆதரவான பிரிவினைவாதிகள் செய்த கிளர்ச்சியால் கிழக்கு உக்ரைனிய பிராந்தியமான டான்பாஸில் வன்முறை வெடித்தது. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதப் படைகள், கிழக்குப் பிராந்தியங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்கில் உள்ள அரசாங்கக் கட்டங்களைத் குறிவைத்து தாக்கின. அவர்கள் மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் 298 பேர் பலியாகினர். கிளர்ச்சியாளர்களின் இந்த நடவடிக்கையை உலகமே எதிர்த்த நிலையில் வெகுண்டெழுந்த உக்ரைன் பதிலடி கொடுத்தது. கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைனிய ராணுவத்திற்கும் இடையிலான சண்டை உச்சகட்டத்தை அடைந்தபோது கிளர்ச்சியாளர்கள் தங்கள் பலத்தை இழக்கத் தொடங்கினர்.
அப்போது ரஷ்ய ராணுவம் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக கிழக்கு உக்ரைனில் வெளிப்படையாக ஊடுருவி தாக்குதல் தொடுத்தது. 2014 ம் ஆண்டு செப்டம்பர் 5-ல், போர் நிறுத்தத்தின் வாயிலாக வன்முறையை கட்டுப்படுத்த முதல் மின்ஸ்க் உடன்படிக்கை கையெழுத்தானது. ரஷ்யா, உக்ரைன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் பிரதிநிதிகள் பெலாரஸில் சந்தித்து டான்பாஸில் வன்முறைக்கு முடிவுகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த உடன்படிக்கை கையெழுத்தானததோடு சரி, நடைமுறைபடுத்த முடியவே இல்லை. பிப்ரவரி 2015-ல் மின்ஸ்க் குழு மீண்டும் பெலாரஸில் சந்தித்து, கிழக்கு உக்ரைனில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மீண்டும் முயற்சி செய்கிறது, இதன் விளைவாக 2-வது மின்ஸ்க் ஒப்பந்தம் ஏற்பட்டது.
ரஷ்யா ஆதரவோடு நடக்கும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் தொடர் தோல்விகள்:
2014 முதல் இன்று வரை, உக்ரைன் கிழக்குப் பகுதியில் 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த சூழலில் கிரைமியா, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதும் இதர பகுதிகளில் வசிக்கும் உக்ரைனிய மக்களின் உணர்வை மேற்கு நோக்கி அதிக விசையுடன் தள்ளியது. அதன் நீட்சியாக நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் ஆர்வம் உக்ரைனிய மக்களிடம் மேலோங்கியது.
உக்ரைனின் கிழக்கு பிராந்தியமான டான்பாஸில் சண்டை தொடர்கையில், ரஷ்யா மீண்டும் மீண்டும் உக்ரைனின் அரசாங்க வலைதளங்களை குறிவைத்தது சைபர் தாக்குதல்களை தொடுப்பதும் தொடர்கதையாகின. இப்படியிருக்க மிக நெருக்கடியான சூழலில் உக்ரைனின் ஐந்தாவது அதிபராக இருந்த பெட்ரோ பொரோஷென்கோவின் ஆட்சியின் ஊழல்கள் மற்றும் ரஷ்ய சார்பை அரசியல் நையாண்டி செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் நகைச்சுவை நடிகர் வோலோமிர் ஓலெக்ஸாண்ட்ரோவிச் செலன்ஸ்கி. வந்த வேகத்திலயே அவருடைய நாடக குழு அரசியல் கட்சியாகவும் மாறியது. உக்ரைனியர்களின் நீண்டகால கோரிக்கைகளான ரஷ்யாவுடனான சிக்கல்களை முடிவுக்குக் கொண்டுவருவதும், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை சமாதானப்படுத்தி கிழக்கு பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை அதிபர் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக கூறி களம் கண்டார். எதிர்பார்த்தது போலவே பிரமாண்ட வெற்றி. 73 சதவீத வாக்குகளைப் பெற்று உக்ரைனின் ஆறாவது அதிபராக 2019-ல் பதவியேற்றார்.
கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் மோதல் முற்றிய நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதனை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்தார். பேச்சுவார்த்தைகள், கைதிகள் பரிமாற்றங்கள் மற்றும் மின்ஸ்க் ஒப்பந்தங்கள் என சமாதான நடவடிக்கைளை அவர் தரப்பு தொடங்கினாலும் ரஷ்யா ஒத்துழைக்க மறுத்ததோடு அந்த நடவடிக்கைகள் எதுவுமே முழுமை அடையாமல் தோல்வியை சந்தித்தது.
அதேநேரம், ரஷ்ய அதிபர் புதின், பிரிவினைவாத கட்டுப்பாட்டுப் பகுதியான கிழக்கு உக்ரைனில் வசித்த மக்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட் வழங்குவதாக அறிவித்து சிக்கலை ஏற்படுத்தினார். ஒருகட்டத்தில் ரஷ்யாவின் அழுத்தங்களை சமாளிக்க தனது முந்தைய அணுகுமுறையை மாற்றிய ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ கூட்டணியில் உக்ரைனை இடம்பெறுவதற்கு முயற்சியை மேற்கொண்டார். இந்த முயற்சியே ரஷ்யாவுடன் தற்போது நடந்துவரும் போருக்கு முக்கிய காரணம்.
ஊடுருவலை தொடங்கிய ரஷ்யா:
2022 பிப்ரவரி 10-ல் உக்ரைனின் வடக்கு எல்லையில் சுமார் 30,000 வீரர்களுடன் ரஷ்யாவும் பெலாரஸும் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கின. அதற்கு அடுத்த நாள் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் குடிமக்களை உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தின. நிலைமை கைமீறிவிட்டதை உணர்ந்த அமெரிக்க அதிபர் பைடன் மேலும் 2,000 துருப்புகளை அமெரிக்காவிலிருந்து போலந்துக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
பிப்ரவரி 15, டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்குப் பகுதிகளில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைனியப் படைகளுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்தது. உக்ரைனின் கிழக்கு பிராந்தியமான டோன்பாஸில் நடப்பது இனப்படுகொலை என்று புதின் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கத்திய நாடுகள் புதினின் இந்த கூற்றை போருக்கான முன்னெடுப்பு என்றன.
அதேநேரத்தில் ரஷ்யா சுமார் 2 லட்சம் வீரர்களை எல்லைகளில் குவித்தது. பிப்ரவரி 21-ல் கிழக்குப் பகுதியில் "அமைதி காக்கும்" பணி என்ற பெயரில் ராணுவத்தை நிலைநிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அவரது இந்த நடவடிக்கையை "ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம்" என்று அறிவித்தார் அமெரிக்கா அதிபர் பைடன் .
'உக்ரைனைக் கைவிட மாட்டோம்' : ஐநா அவசர கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேச்சு
எதிர்பார்த்தபடியே. பிப்ரவரி 24 அன்று, ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது பேரழிவு தரும் தாக்குதலைத் தொடங்கின. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கு பிறகு ஐரோப்பா ஒன்றியத்தில் இது மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாகும். உக்ரைன் தலைநகரம் உள்ளிட்ட நகரங்கள் மீது குண்டுகள் பாய்ந்தன. பெலாரஸ் மற்றும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரைமியாவிலிருந்து ரஷ்ய படைகள் எந்த வித தடையின்றி முன்னேறி உக்ரைனின் மூலை முடுக்குகளில் எல்லாம் போரை தீவிரப்படுத்தியுள்ளன .
ரஷ்யாவின் ஐந்தாவது நாள் படையெடுப்பில், உக்ரேனிய நாட்டின் பல நகரங்களில் வான்வழித் தாக்குதலுக்கான அவசரகால சைரன்கள் ஒலித்தன. அமெரிக்கா. ஐரோப்பா நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததை ரஷ்யா பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய அரசின் மீதான மிகப்பெரிய தாக்குதல் நடந்துகொண்டிருக்கையில் அணு ஆயுதப் படைகளை தயார் நிலையில் இருக்கும்படி புதின் உத்தரவிட்டிருப்பது உலக நாடுகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 5வது நாளாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர பெலாரஸ் எல்லையில் ரஷ்யாவுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ரஷ்ய படைகளை உடனடியாக திரும்ப பெற உக்ரைன் வலியுறுத்தியது. ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Russia - Ukraine