ரஷ்யாவின் பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய்க் கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக, அமைதிப் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 37-வது நாளாக வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. உக்ரைன் ராணுவத்தினரும் ரஷ்யப் படைகள் மீது ஆங்காங்கே பதில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரஷியாவின் பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய்க் கிடங்கு மீது உக்ரைன் ஹெலிகாப்டர்கள் குண்டு மழை பொழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் இந்தத் தாக்குதலில் எண்ணெய் கிடங்கு கொளுந்து விட்டு எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஊழியர்களில் இருவர் காயம் அடைந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தாக்குதல் குறித்த கருத்து தெரிவித்துள்ள கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைனின் இந்த செயல்பாடு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு குந்தகம் விளைவிக்கும் என கூறியுள்ளார்,
ரஷ்யப் படைகள் உக்கிர தாக்குதல் நடத்தி வரும் மரியுபோல் நகரில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்க புதிய வழிமுறைகளை கண்டறிந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், மரியுபோல் உள்ளிட்ட தென் நகரங்கள் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிபர் செலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி.. அசாதாரண அரசியல் சூழல்: இலங்கையில் அவசரநிலை பிரகடனம்
இதனிடையே, ரஷ்ய நாணயமான ரூபிளைக் கொண்டு மட்டுமே எரிவாயு வாங்க வேண்டும் என அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரூபிளை பயன்படுத்தாத நாடுகளின் எரிவாயு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்பட்டு அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம், ரூபிளாக மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள், இயற்கை எரிவாயுவிற்கு ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளன. எனினும் ரஷ்யாவின் நிபந்தனையை பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் நிராகரித்துள்ளன. புதினின் நிபந்தனையை, அரசியல் மிரட்டல் என வர்ணித்துள்ள பிரான்ஸ், ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி யூரோ- வில் மட்டுமே வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளது.
பல்வேறு நாடுகளும் சந்திக்கும் பிரச்னையை சமாளிக்க அமெரிக்காவின் கையிருப்பிலிருந்து அன்றாடம் 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை விடுவிக்க அதிபர் ஜோ பைடன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விரைவில் பைடன் உத்தரவு பிறப்பிப்பார் எனவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Russia, Russia - Ukraine