ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விளக்கம்

விளாதிமிர் புதின்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்துள்ளதாக ரஷ்யா கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிவித்தது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த அறிவிப்பிற்கு பின் ஓராண்டை நெருங்கும் நிலையில், ரஷ்யாவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. ரஷ்யாவுக்கு மூன்று மாதங்களுக்கு பின் ஃபைசர் மற்றும் மாடர்னா மருந்துகளை அங்கீகரித்த அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் கிட்டத்தட்ட பாதிப்பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 87 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் தற்போது வரை 13 சதவீத ரஷ்யர்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

  தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 62 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்த விரும்பவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் 56 சதவீதம் பேர், தாங்கள் நோய்த்தொற்று குறித்து பயப்படவில்லை என்று கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிபர் விளாடிமிர் புதின் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக் கொண்டதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்தது. ஆனால் அதுகுறித்த புகைப்படங்களையோ, வீடியோ காட்சிகளையோ வெளியிடவில்லை.

  இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரிதான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வருடாந்தர கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற புதின், தான் ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்தார். ரஷ்யாவில் ஸ்புட்னிக் உட்பட நான்கு கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தான் ஒரு தடுப்பூசியின் பெயரை தெரிவித்தால் அது வர்த்தகப் போட்டியை உருவாக்கும் என்பதால் அப்போது அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்தார்.

  ராணுவத்தினர் அனைவரும் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டிருப்பதால், ராணுவத்தின் தளபதி என்ற முறையில் தானும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக கூறிய புதின், கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை தான் ஆதரிக்கவில்லை என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ரஷ்யாவில் கொரோனாவின் அடுத்த அலை பரவத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த திங்களன்று இந்த ஆண்டின் அதிகபட்சமாக 21,650 பேருக்கு தொற்று உறுதியானது. அன்று ஒரே நாளில் 611 பேர் உயிரிழந்தனர். தடுப்பூசி செலுத்துதலை விரைவுபடுத்த அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
  Published by:Karthick S
  First published: