Home /News /international /

உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துக - ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துக - ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

International Court of Justice | உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு உத்தரவிடக் கோரியும், அந்நாட்டு படைகளை வெளியேற்றக் கோரியும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய, எந்தவொரு நடவடிக்கையிலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

    தீர்ப்பை நிர்ணயிக்கக் கூடிய ஜூரிக்கள் எனப்படும் 15 நீதிபதிகளில் 13 பேரின் ஆதரவுடன் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் உள்ள இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி பெரும்பான்மைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, இது தங்களுக்கான வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

    Also Read : ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையும் அறிவிப்பு

    சர்வதேச சட்டத்திற்கு உட்பட்ட இந்த உத்தரவிற்கு ரஷ்யா உடனடியாக இணங்காமல் புறக்கணித்தால், சர்வதேச அரங்கில் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என்று செலன்ஸ்கி கூறியுள்ளார். சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒரு நாடு இணங்கவில்லை என்றால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலிடம் நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் பரிந்துரைப்பார்கள். ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா வீட்டோ அதிகாரம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாக பேசிய செலன்ஸ்கி, உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதம் தொடர்பான வீடியோவை காட்டி மிகவும் உருக்கமாக பேசினார். அமெரிக்க அதிபர் பைடன் உலகத்தின் தலைவராக இருக்கவேண்டும் என தான் விரும்புவதாகவும், அமைதியின் தலைவராக அவர் இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள் எனவும் அவர் குறிப்பிட்டார். செலன்ஸ்கி தனது உரையை தொடங்குவதற்கு முன்பாக, காணொலி திரையில் தோன்றியதுமே, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி அவரை வரவேற்று ஆதரவு அளித்தனர்.

    இதையடுத்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் பைடன், உக்ரைனுக்கு மேலும் ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, 800 விமான எதிர்ப்பு மற்றும் ஒன்பதாயிரம் கவச எதிர்ப்பு ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளன. சிறிய ஆயுதங்களான ஷாட்கன், கிரெனேட் லாஞ்சர்கள் மற்றும் டிரோன்களும் உக்ரைனுக்கு வழங்கப்படும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி