உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள் அணுமின் நிலையத்தையும் கைப்பற்றியுள்ளது. இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர். கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்பவர் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் அமைச்சர் வி.கே.சிங், “உக்ரைன் தலைநகர் கிவ் பகுதியில் இருந்து வெளியேற முயன்றபோது இந்திய மாணவர் ஒருவர் சுடப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிவ் நகரில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தது. யுத்தத்தின்போது, துப்பாக்கிக் தோட்டா ஒருவரின் மதத்தையோ நாட்டையோ பார்ப்பதில்லை’ என என்று மத்திய அமைச்சர் விகே.சிங் தெரிவித்தார்.
இதையும் படிக்க: உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக இல்லை - வெளியுறவு அமைச்சகம்
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதற்காக தற்போது போலாந்தில் உள்ள மத்திய அமைச்சர் வி.கே.சிங், அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் 800 முதல் 900 மாணவர்கள் வரை மீட்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.