உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போர் தாக்குதலில் 3 லட்சம் டன் உணவு தானியங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் வேளாண்துறை அமைச்சர் டாராஸ் விசோட்ஸ்கி இது தொடர்பாக கூறுகையில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் மாபெரும் உணவு தானிய கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் சுமார் 3 லட்சம் டன் அளவிற்கு கோதுமை, சோளம் உள்ளிட்ட தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தானிய கிடங்கு மீது ரஷ்ய ராணுவம் கடந்த வாரம் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஒட்டுமொத்த கிடங்கும் சேதமடைந்துள்ளது என்றார்.
உலகின் முன்னணி உணவு தானிய ஏற்றுமதியாளரான உக்ரைனின் வர்த்தகம், போர் தாக்குதல் காரணமாக முடங்கியுள்ளது. கருங்கடல் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்லும் உணவு தானியங்கள் ரஷ்ய படையெடுப்பு காரணமாக தடைப்பட்டுள்ளது. கடந்த வாரம் கீவ் பகுதியில் உள்ள மாபெரும் உணவு கிடங்கில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குல் மூலம் உலக சந்தையில் உணவு பொருள்களின் விலையை உயர செய்து மேற்கத்திய நாடுகளுக்கு நெருக்கடி அளிக்க ரஷ்யா முயற்சி செய்வதாக உக்ரைன் அரசு குற்றச்சாட்டு எழுப்பி வருகிறது.
சமீபத்திய தாக்குதல் மூலம் சர்வதேச சந்தையில் கோதுமை விலை 5 சதவீதம் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவி வருவதால், இது போன்ற தாக்குதல் மூலம் அந்நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மோசமடைய செய்து பலவீனமாக்க ரஷ்யா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடை மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா எண்ணெய்யை புறக்கணிப்பதாக எடுத்த முடிவே இதற்கு முக்கிய காரணம்.
இதையும் படிங்க:
ஒரே விரலில் 130 கிலோ தூக்கி கின்னஸ் உலக சாதனை - அசத்தல் மனிதர் இவர்தான்
அதேபோல், உலகின் 4ஆவது பெரிய உணவு ஏற்றுமதியாளரான உக்ரைன் எதிர்கொண்டு வரும் சவால் காரணமாக உணவு பொருள்களின் விலையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த உணவு பொருள் விலையேற்றம் நலிவடைந்த நாடுகளையே வெகுவாக பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே நிலை நீட்டித்தால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.