#Exclusive | கூடங்குளம் அணுவுலையின் எரிபொருளை மாற்ற ரஷிய அனுசக்தி நிறுவனம் திட்டம்!

எரிபொருளை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு புதிதாக சுற்றுச்சூழல் அனுமதிகோரி இந்திய அணுமின் சக்திக் கழகம் விண்ணப்பித்தால் இத்திட்ட்டத்திற்கு மீண்டும் ஒருமுறை பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமும் சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

சதீஷ் லக்‌ஷ்மணன் | news18
Updated: April 20, 2019, 12:45 PM IST
#Exclusive | கூடங்குளம் அணுவுலையின் எரிபொருளை மாற்ற ரஷிய அனுசக்தி நிறுவனம் திட்டம்!
கூடங்குளம் அணு உலை
சதீஷ் லக்‌ஷ்மணன் | news18
Updated: April 20, 2019, 12:45 PM IST
கூடங்குளம் அணுவுலையில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எரிபொருளான MTVS-க்குப் பதிலாக புதிய எரிபொருளான TVS_2M என்ற எரிபொருளை பயன்படுத்த ரஷ்ய அரசின் அணுசக்தி நிறுவனமான ரொசட்டோம் தெரிவித்துள்ளது.

கூடங்குளத்தில் இந்தியா - ரஷியா கூட்டு முயற்சியில் செயல்பட்டு வரும் 2 உலைகளுக்கான உபகரணங்கள் அனைத்தையும் ரஷிய அணு உலை சக்தி கழகமான ரொசட்டோம் (ROSATOM) நிறுவனம்தான் தயாரித்து வழங்கியது.

மேலும் அங்கு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு உலைகளுக்கு மற்றும் கட்டப்படவிருக்கும் இரண்டு உலைகளுக்குமான உபகரணங்களையும் ரொசட்டோம் நிறுவனம்தான் தயாரித்து வழங்கவுள்ளது.


ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில்  11-வது உலக அணுசக்தி மாநாடு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ரொசட்டோமின் எரிபொருள் நிறுனமான TVEL-ன் துணைத் தலைவரான ஒலெக் க்ரிகோரிவ் பேசுகையில்  கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் இரண்டு உலைகள் மற்றும் புதிதாக வரவிருக்கும் 4 உலைகளுக்கும் புதிய எரிபொருள் ஒன்றை பயன்படுத்தவிருப்பதாகக் கூறினார்.

ஒலெக் க்ரிகோரிவ்


Loading...

தற்போது MTVS என்ற எரிபொருளைக் கொண்டுதான் கூடங்குளத்தின் இரண்டு உலைகளிலும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதற்குப் பதிலாக வருகிற 2021ஆம் ஆண்டிலிருந்து இரண்டு உலைகளும் TVS-2M என்ற புதிய எரிபொருளின் மூலம் மின்னுற்பத்தி செய்யும் எனக் கூறினார்.

இந்த புதிய எரிபொருளை உலைகளில் பயன்படுத்தும் வகையில் உலையின் அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

புதிய எரிபொருளின் நன்மைகள்:

இந்த புதிய எரிபொருளை பயன்படுத்துவதால் அணுவுலையின் திறன் மற்றும் செயல்பாடு உயரும் எனவும் அணுவுலையின் செயல்பாட்டிற்கு செலவாகும் மின்சக்தியின் தேவை மிகவும் குறையும் என்றும் ஒலெக் க்ரிகோரிவ் தெரிவித்தார்.

அணுவுலையில் தற்போது 12 மாதங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எரிபொருளை எடுத்துவிட்டு புதிய எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த புதிய எரிபொருளை 18 மாதங்களுக்கு ஒருமுறை நிரப்பினால் போதும் எனவும் தெரிவித்தார்.

செயற்பாட்டாளர்கள் அச்சம்:

இதுகுறித்து நம்மிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்  வெற்றிச்செல்வன் “ அணுசக்தித் துறை அதிகாரிகள் அனைவரும் கூடங்குளம் அணுவுலை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவே இத்தனைநாள் கூறிவந்துள்ளனர்.

அப்படியிருக்கையில் புதிய எரிபொருளை ஏன் பயன்படுத்த வேண்டும்? இந்த எரிபொருளைக் கையாள்வதால் என்ன மாதிரியான அணுக்கழிவு உற்பத்தியாகும்? அணுக்கழிவை கையாள்வதற்கு இந்திய அணுமின் சக்திக் கழகத்திடம் தொழில்நுட்பம் உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு மக்களிடம் பதில் சொல்லிவிட்டுத்தான் இந்திய அணுமின் சக்திக் கழகம் புதிய எரிபொருளை பயன்படுத்த வேண்டும்.

வெற்றிச்செல்வன்


மேலும் EIA NOTIFICATIONல் உள்ள பத்தி 2ன் படி ஏற்கெனவே செயல்பட்டு வரும் உலையில் ஏதேனும் மாற்றம், விரிவாக்கம் போன்றவை செய்ய வேண்டுமானால் புதிதாக  சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம். அப்படி முறையாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அணுவுலையில் மாற்றம் செய்வது சட்டவிரோதமாகும்” எனத் தெரிவித்தார்.

EIA NOTIFICATION படி எரிபொருளை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு புதிதாக சுற்றுச்சூழல் அனுமதிகோரி இந்திய அணுமின் சக்திக் கழகம் விண்ணப்பித்தால் இத்திட்ட்டத்திற்கு மீண்டும் ஒருமுறை பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமும் சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

அப்படி நடந்தால் மிகப்பெரிய மக்கள் எதிர்ப்பை இந்த முயற்சி சந்திக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

படிக்க... விரைவில் செயல்பாட்டுக்கு வரும் கூடங்குளம் 3, 4-வது அணு உலைகள்

Also See...


First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...