நம் நாட்டில் கோடைகாலம் முடிந்து படிப்படியாக மழைக்காலம் துவங்கி வரும் நிலையில் இங்கிலாந்தில் வெயில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் (ஜூலை 19 அன்று) பிரிட்டனின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்தது. மேற்கு லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் என்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதற்கு முன், UK-ல் கடந்த 2019-ல் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜில் 38.7 செல்சியஸ் பதிவானதே அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது. இந்த ஆண்டு கடும் கோடை வெப்பத்துடன் பிரிட்டன் போராடுகிறது. சாலைகள் கூட உருகும் அளவுக்கு வெப்பம் அங்கே மிக கடுமையாக உள்ளது. மிகவும் அதிகரித்து காணப்பட்ட வெப்பநிலை பிரிட்டனின் பல இடங்களில் இதே போன்று சாலைகள் உருகும் நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது.
கிரேட்டர் மான்செஸ்டரின் பரபரப்பான ஸ்டாக்போர்ட்டில் உள்ள ஒரு சாலை, இந்த வார தொடக்கத்தில் கிட்டத்தட்ட உருகி திரவமாக தேங்கி நின்றுள்ள செய்தி மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. வெப்பம் தாங்காமல் தார் சாலை உருகி திரவமாக தேங்கி நின்ற அரிய காட்சியை நேரில் பார்த்த சிலர் கூறுகையில், மழை பெய்தவுடன் கார்கள் தேங்கி இருக்கும் தண்ணீரில் செல்வது போன்று இருக்கிறது. அதில் குறுக்கே நடந்து சென்றால் கால்கள் சாலையில் சிக்கி கொள்ளும் அளவுக்கு அவ்வளவு சாஃப்ட்டாக இருந்தது என்றும், மற்றொருவர் தன் கார் டயர்களின் இடுக்கில் எல்லாம் தார் நன்றாக பதிந்து கொண்டது என்றும் கூறினர்.
இங்கிலாந்தின் வடமேற்கில் கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் கடந்த ஜூலை 19 அன்று 34.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது., 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதிவான முந்தைய 33.9 டிகிரி செல்சியஸ் என்ற அதிகபட்ச வெப்ப நிலையை இது தாண்டியது. தார் சாலை உருகியது தொடர்பாக பிரிட்டனின் ரோட் ட்ரீட்மென்ட் அசோசியேஷன் கூறுகையில், சாலைகள் உருகுவதற்கு வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தொட வேண்டும். இருப்பினும் சாலையின் மேற்பரப்பு அதிக வெப்பத்தை உறிஞ்சுவதால், 25 டிகிரி செல்சியஸை தாண்டும் ஒரு வெயில் நாள் கூட தரையில் 50 டிகிரி செல்சியஸை உருவாக்க போதுமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளது.
இதையும் படிங்க: 5ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை.. சூப்பர் ஹீரோ போல கேட்ச் பிடித்து காப்பாற்றிய நபர்... வைரல் வீடியோ
கடும் வெயில் காரணமாக வெப்பநிலை அதிகமாக இருக்கும் சில பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக ரயில் பாதைகள் மற்றும் பள்ளிகள் மூடப்படுவதால், வெப்பநிலை அதிகரிப்பு என்பது இங்கிலாந்தில் இதற்கு முன் இருந்திராத வகையில் ரெட் அலெர்ட்டை தரும் அளவிற்கு உள்ளது. அதிகரித்து வரும் வெப்பத்தால் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளதால் வனத்துறை உட்பட பல துறைகள் உஷார்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே சமீப ஆண்டுகளாக தொடரும் அதிக வெப்பநிலை காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். காலநிலை தணிப்பு முயற்சிகளில் உலக நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டாலும் கூட, குறைந்தபட்சம் இன்னும் 38 ஆண்டுகளுக்கு அதாவது 2060 ஆம் ஆண்டு வரை, வெப்பநிலையில் இந்த எதிர்மறை போக்கு தொடரும் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டு உள்ளனர். புவி வெப்பமடைதல் தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிர்வெண்ணை அதிகரித்துள்ளதாகவும் எச்சரிக்கின்றனர். இங்கிலாந்தில் வெப்பநிலை 40 டிகிரியை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட இப்போது 10 மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Britain, England, Heat Wave, Summer Heat