Home /News /international /

மகிந்த ராஜபக்சவின் 50 ஆண்டு கால அரசியல்.. வளர்ச்சியும்.. வீழ்ச்சியும்..

மகிந்த ராஜபக்சவின் 50 ஆண்டு கால அரசியல்.. வளர்ச்சியும்.. வீழ்ச்சியும்..

மகிந்த ராஜபக்சே

மகிந்த ராஜபக்சே

Mahinda Rajapakse: 51 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், பிரதமர், அதிபர் என அவர் வகிக்காத பதவியே இல்லை எனலாம். இலங்கை நாட்டோடு கலந்து விட்ட ஒரு பெயர் ராஜபக்ச.

  1970 ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் மகிந்த ராஜபக்ச. 51 கால அரசியல் வாழ்க்கையில் நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், பிரதமர், அதிபர் என அவர் வகிக்காத பதவியே இல்லை எனலாம். இலங்கை நாட்டோடு கலந்து விட்ட ஒரு பெயர் ராஜபக்சே. அதன் முன்னேற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் ராஜபக்சக்களே காரணம். 1970 ஆம் ஆண்டு பெலியத்த தொகுதியில் வெற்றி பெற்ற மகிந்த இலங்கையில் மிகக் குறைந்த வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு தேர்வான உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றார். பின்னர், 1978-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார், அதன்பின்னர் தொடர்ச்சியாக மகிந்த ராஜபக்சவுக்கு தோல்வி முகம்தான். பிறகு 1989- ஆம் ஆண்டு தான் மீண்டும் தேர்தலில் வெற்றியடைந்தார்

  1994- ல் நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெருபான்மை கிடைக்காமல் போக. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உதவியுடன் ஆட்சியமைத்தார் சந்திரிகா குமாரதுங்க. அப்போது முதல்முறையாக அமைச்சரான மகிந்த ராஜபக்ச-வுக்கு தொழிலாளர் நலத் துறை கிடைத்தது. 1997ல் ஜெனீவாவில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டிற்காக மகிந்த சென்றிருந்த போதே, அவரிடமிருந்து அத்துறை பறிக்கப்பட்டது. அப்போதிலிருந்து சந்திரிகாவுடன் மகிந்தவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது.

  2001-ல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடிக்க, எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த. தமிழ்ப் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வுகளை அளிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால், 2004 ஏப்ரலில் மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இடங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி வென்றது. அப்போது, தனது ஆதரவாளரான ரத்ன ஸ்ரீ விக்ரமசிங்கேவை பிரதமராக்க விரும்பினார் சந்திரிகா. ஆனால், பௌத்த பிக்குகளின் ஆதரவு மகிந்தவுக்கே இருந்தது. முடிவில், தனக்கு விருப்பமில்லாத நிலையிலும் மகிந்தாவை பிரதமராக்கினார் சந்திரிகா குமாரதுங்க.

  அமைச்சராக இருந்த போதே தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் மீதான எதிர்ப்பை தீவிரப்படுத்த தொடங்கினார். எதிர்க்கட்சியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கே தமிழர்கள் மீது மென்மையான போக்கினை கடைப்பிடித்த காலகட்டத்தில், ராஜபக்ச சிங்கள மக்களுக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்கினார்.

  இந்த சூழலில்தான் 2005 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு போட்டியிட்டார் மகிந்த. அவருக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே களமிறங்கினார். ஆனால் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தது விடுதலைப்புலிகள் அமைப்பு. இதன் காரணமாக மிக சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த வெற்றிபெற்றார். இலங்கையின் 6-வது அதிபராக 2005இல் பொறுப்பேற்ற ராஜபக்ச, ஏற்கனவே கூர்மையடைந்திருந்த இன பாகுபாட்டை மேலும் வலுவாக்கினார். இதன் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் மீதான போர் தீவிரமடைந்தது. இந்த போரில் அப்பாவி தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர்.

  விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க தீவிரமாக களமிறங்கி, அத்தனை போர் நெறிமுறைகளையும் தவிடுபொடியாக்கிவிட்டு 2009இல் அவர்களை வீழ்த்தினார் மகிந்த. விடுதலைப்புலிகளை வீழ்த்திவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த இலங்கை, தாமும் வீழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணரவில்லை. சிறீசேனா, ரணில் விக்கிரமசிங்கே கூட்டணி இலங்கையில் ஆட்சிக்கு வந்தது. பிறகு சிறீசேனா - ரணில் கருத்துவேறுபாடு காரணமாக ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மகிந்த பிரதமரானார். பின்னர் நீதிமன்றத்தால் அது செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பதவி விலகினார். 2019இல் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பிரதமரானார் மகிந்த.

  அவர் மீது தற்போதும் பல மனித உரிமை மீறல் வழக்குகள் உள்ளன. தமிழர்கள் மீதான இனவெறி படுகொலைகள் குறித்து எழுதிய பல பத்திரிகையாளர்களை கொன்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

  இதையும் படிங்க: ஜப்பான் விரைவில் காணாமல்போகும்.. மக்கள் தொகை வீழ்ச்சி குறித்து எலான் மஸ்க் கருத்து

  ஆரம்பம் முதலே இலங்கை சுதந்திர கட்சியில் இருந்துவந்த மகிந்த ராஜபக்சே, 2018 இல் அந்த கட்சியை உடைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் புதிய கட்சியை உருவாக்கினார். அவரது தம்பிகள் கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரை அரசியலில் அமைச்சர் உள்ளிட்ட உயர்பதவிக்கு கொண்டுவந்தார். தற்போது ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்ச இலங்கையின் அதிபர் பதவியை வகிக்கிறார்.
  Published by:Kannan V
  First published:

  Tags: Mahinda Rajapakse, Sri Lanka political crisis

  அடுத்த செய்தி