இலங்கையின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். 73 வயதான ரணில் விக்ரமசிங்கவுக்கு அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜெயந்தா ஜெயசூர்யா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டத்தை அடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இந்நிலையில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல், நேற்று நடைபெற்றது.
ஆளுங்கட்சி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்தியது. தேர்தலில் போட்டியிடுவதாக கூறியிருந்த சஜித் பிரேமதாசா இலங்கை மக்களின் நலன் கருதி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகளும் இன்றே அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 225 எம்பிகளில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்தனர். மீதமுள்ள 223 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதில் 4 ஓட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளும், டல்லஸ் அழகப்பெருமா 82 வாக்குகளும், அனுரா குமார திஸ்சநாயகே 3 வாக்குகளும் பெற்றனர்.இதையடுத்து, ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க 6 முறை இருந்துள்ளார். இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக நீண்டகாலமாக கோலோச்சிவரும் ரணில் இந்த வரலாறு காணாத நெருக்கடியை எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இவரின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு நவம்பர் வரை உள்ளது.
இதையும் படிங்க:
அனலில் தகிக்கும் ஐரோப்பா.. 30 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ - மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் செயலகம் நோக்கி போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டு, அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.