இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நீதிமன்றத்தை நாட ரணில் விக்ரமசிங்கே முடிவு!

ரணில் விக்கிரமசிங்க

நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவில் நேற்றிரவு சிறிசேன கையெழுத்திட்டார். ஜனவரி 5-ல் தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான மனு தாக்கல் 19-ம் தேதி தொடங்கும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ஜனவரி 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டார். புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

  மேலும் நாடாளுமன்றமும் முடக்கப்பட்டது.  இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்ததால், நாடாளுமன்றம் 14-ம் தேதி கூடும் என்று சிறிசேனா அறிவித்தார். நாடாளுமன்றம் கூடியதும் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரியா கூறினார்.

  பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் என்ற சூழலில், ராஜபக்சேவுக்கான ஆதரவை திரட்ட சிறிசேனா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவில் நேற்றிரவு சிறிசேன கையெழுத்திட்டார். ஜனவரி 5-ல் தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான மனு தாக்கல் 19-ம் தேதி தொடங்கும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

  சிறிசேனாவின் இந்த நடவடிக்கையை ஜனநாயகப் படுகொலை என்று ரணில் சாடியுள்ளார். மேலும் இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக ரணில்  அறிவித்துள்ளார். இதனிடையே, அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே நாடாளுமன்றத்தை சிறிசேனா கலைத்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சரத் அமனுகாமா தெரிவித்துள்ளார்.

  இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் வருத்தம் அளிப்பதாகவும், அங்கு நிலவும் நெருக்கடியை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ஃபீல்ட், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காக்க இலங்கையின் அனைத்து கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: