தேவாலயங்களில் ஏன் அரசுப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை! கேள்வி எழுப்பும் ராஜபக்சே

ராஜபக்ச

அந்த எச்சரிக்கைத் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தது? தேவலாய நிர்வாகிகளுக்கு அரசு ஏதேனும் எச்சரிக்கை கொடுத்ததா? அல்லது தேவாலயங்களில் ஏதேனும் பாதுகாப்புகளை அதிகப்படுத்தியதா?

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஈஸ்டர் போன்ற நிகழ்வுகளில் வழக்கமாக அரசு சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் நிலையில், குண்டு வெடிப்பு நடந்த தேவாலயங்களில் அரசுப் பிரதிநிதிகள் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று இலங்கையின் எதிர் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே கேள்வி எழுப்பியுள்ளார்.

  இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே, ‘ஈஸ்டர் ஞாயிறன்று குண்டு வெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து நம் நாட்டின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வதற்காக நாம் இங்கே கூடியுள்ளோம். இந்தத் தாக்குதலில், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

  பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையினர்


  குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதயம் கனத்த எனது இரங்கலையும், இந்தத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

  மே 19, 2009-ம் ஆண்டு 30 ஆண்டுகால போரை நாம் முடிவுக்கு கொண்டு வந்தபோது, இந்த மாதிரியான தாக்குதலை கடைசியாக பார்க்கிறோம் என்று நினைத்திருந்தோம். அடுத்த மாதம், தீவிரவாதம் முடிவுக்கு வந்த 10-வது ஆண்டு நினைவு தினத்தை நாம் அனுசரிக்கவுள்ளோம். 30 ஆண்டு கால போர்ச் சூழலின்போது கூட ஈஸ்டர் ஞாயிறன்று நடைபெற்ற படுகொலை போன்று பொதுமக்கள் மீது ஒரு தாக்குதல் கூட நடைபெற்றது கிடையாது.

  யாழ்.மாவட்டத்திலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


  விடுதலைப் புலிகள் கூட ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள், இத்தகைய அழிவை ஏற்படுத்தியது கிடையாது. இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலானது தெற்கு ஆசியா முழுவதும் குடிமக்கள் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைக்கிறது. 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் கூட இவ்வளவு மக்கள் பலியாகவில்லை.

  இந்தப் பாராளுமன்றம், நச்சுத் தன்மையுடைய தீவிரவாதம், இந்த நாட்டில் மீண்டும் தலை தூக்கக் கூடிய சூழ்நிலைகளை உற்று கவனித்துவருகிறது. 2015-ம் ஆண்டு முழு பாதுகாப்பு மற்றும் அமைதி கொண்ட நாட்டை புதிய அதிபரிடம் ஒப்படைத்தேன். உளவு அமைப்புகளை நாம் வலிமைப்படுத்தியிருந்தோம். அதனால், நாட்டின் தேசப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இருந்தது. நம்முடைய உளவு அமைப்புகள் அண்டை நாடுகளுடைய உளவு அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி, தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்கள்.

  எப்போதாவது, நாம் தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தை உணர்ந்தால், அதற்கு எதிர்வினை ஆற்றவேண்டும். கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தாக்குதலுக்கு தற்போதை அரசுதான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த தாக்குதல் குறித்து காவல்துறையினர் ஏற்கெனவே எச்சரிக்கைவிடுத்துள்ளனர். அந்த எச்சரிக்கைத் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தது? தேவலாய நிர்வாகிகளுக்கு அரசு ஏதேனும் எச்சரிக்கை கொடுத்ததா? அல்லது தேவாலயங்களில் ஏதேனும் பாதுகாப்புகளை அதிகப்படுத்தியதா? தற்போதைய அரசின் எல்லாத் தலைவர்களும் குண்டு வெடிப்பு நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

  ஈஸ்டர் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் அரசு சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். ஆனால், இந்தமுறை அரசு சார்பில் இந்த சர்ச்களில் எந்த பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவில்லை. வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு நான் சென்றபோது, இந்த சூழ்நிலையை பயன்படுத்தி நான் அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறேன் என்று அமைச்சர் பேசுகிறார். வெளிநாடுகளின் உத்தரவுப்படி, இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்பதை இந்த அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ளவேண்டும்.

  நம்முடைய பிரச்னையை நாம்தான் தீர்க்கவேண்டும். ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்காது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்காக ஒரு சில அதிகாரிகளை பலியாக்குவதற்கு அரசு தயாராகியுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. இந்த விவகாரத்திலிருந்து தங்களுடைய பொறுப்பை தட்டிக் கழிக்கப் பார்க்கிறது.

  இந்தச் சம்பவத்துக்காக யாரேனும் பதவி விலகவேண்டும் மென்றால், அரசு தான் பதவி விலக வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, ஒரு எதிர்கட்சியாக, சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் ஆயுதப் படை வீரர்களுக்கும் எங்களுடைய முழு ஒத்துழைப்பு அளிப்போம். மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன். தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: