ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சாதனை படைத்துள்ளதாக அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது. இதனை கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த அரசியல் நாடக காட்சிகள் இம்மாத தொடக்கத்தில் முடிவுக்கு வந்தன. கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியில் இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இம்மாத தொடக்கத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை எதிர்கொண்டார்.
இதில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பு கைவிட்டுப் போனது. இதையடுத்து பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷரீப் பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷரீப், பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்டவர். இந்த நிலையில் இம்ரான் கான் ட்விட்டர் ஸ்பேஸ் த்ளத்தில் நேற்று முன்தினம் இரவு பேசினார். அவரது பேச்சை கேட்பதற்காக ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் ட்விட்டர் ஸ்பேஸில் இணைந்தனர்.
இந்த எண்ணிக்கையில் பயனாளிகள் ஒரு ஸ்பேஸை கேட்பது என்பது ட்விட்டர் வரலாற்றில் இதுவே முதன் முறை என்று, இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக ட்விட்டர் ஆவணங்களை அக்கட்சி பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க - விமானத்தில் சக பயணிக்கு சரமாரியாக குத்து விட்ட மைக் டைசன்... தீயாய் பரவும் வீடியோ
ட்விட்டர் ஸ்பேஸில் இம்ரான் கான் பேசியபோது, ‘சில மோசமான சக்திகள், சக்திவாய்ந்த இடத்தில் இருக்கும் சிலர் என்னை ஆட்சி பொறுப்பில் இருந்து நீக்கி விட்டார்கள். ஆட்சிப் பொறுபபில் இருக்கும் ஒருவர் தவறு செய்தால், ஒட்டுமொத்த நிர்வாகமே தவறானது என்ற முடிவுக்கு மக்கள் வரக் கூடாது. நமது கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இன்னும் இருக்கிறது. இந்த தோல்வி என்பது தற்காலிக பின்னடைவுதான். இவற்றில் இருநது தொண்டர்கள் பாடம் பெற்று, அடுத்து ஆட்சியைப பிடிப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்ட வேண்டும். பாகிஸ்தான் மக்கள் நமக்கு மீண்டும் சேவை செய்வதற்கான வாய்ப்பை தருவார்கள்’ என்று பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.