கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற நிகழ்வுகளின் தாக்கம் உள்ளிட்டவை உலக நாடுகளிடம் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே, பொருளாதார சிக்கலில் தவித்த நாடுகளுக்கு இந்த சூழல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. அப்படித்தான், மத்திய கிழக்கு நாடான லெபனான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஊழல் மிகுந்த ஆட்சியின் விளைவால் 2019இல் இருந்து மோசமான பொருளாதார சரிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் சுமார் 60 லட்சம் மக்கள் வறுமையில் தவிக்கின்றனர். அந்நாட்டு பணத்தின் மதிப்பும் டாலருக்கு எதிராக 97 சதவீதம் சரிவு கண்டுள்ளது. 80 சதவீத லெபனான் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பதாக ஐ.நா கவலையுடன் கூறியுள்ள நிலையில், மக்களின் போராட்டத்தால் ஆட்சியாளர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிபர் பதவி விலகிய நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்ய முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. காபந்து அரசோ செயல் திறனின்றி உள்ளது.
இந்த பொருளாதரா நெருக்கடி காரணமாக எரிவாயு, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். இந்த சூழலில், அந்நாட்டின் வங்கிகள் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன் காரணமாக வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் மாதக்கணக்கில் தொடர்ந்து வருவதால் மக்கள் கொதித்து எழுந்து வீதிகளில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.
இந்த போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. தலைநகர் பெய்ரூட்டில் திரண்ட பொதுமக்கள், பல முக்கிய வங்கிகளையும், அதன் ஏடிஎம்களையும் அடித்து நொறுக்கினர். அத்துடன் பூட்டப்பட்ட வங்கி நுழைவு வாயில்களில் தீவைத்தனர். பல வங்கிகளின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதனால் அப்பகுதிகள் போர்களம் போல காட்சி அளித்தது. நிலைமை மோசமடைந்ததை உணர்ந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி, அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து வங்கி பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, சுற்றிலும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.