சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு இதுவரை கண்டிராத அசாதாரண சூழலை கண்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அரசின் கறாரான லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு மேலாக உலகையே வாட்டிவதைத்த கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பானது 2019ஆம் ஆண்டில் முதல்முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் முதல் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார மையத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தடுப்பூசி உள்ளிட்ட யுக்திகளைக் கொண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அதேவேளை, சீனாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக வேகமாக தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
அந்நாட்டில் தினசரி பாதிப்பு சுமார் 40,000ஐ நெருங்கியுள்ள நிலையில், முன்னணி நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், குவாங்ஸோ போன்ற பகுதிகளில் நோய் பரவலை தடுக்க தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் கொந்தளிப்புக்கு இதுவே காரணம்.சீனா அரசு கோவிட் பரவலை தடுக்க ஜீரோ கோவிட் பாலிசி(Zero Covid Policy) என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஒன்று, இரண்டு பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்நாட்டு அரசு ஒட்டுமொத்த நகரத்திற்கே லாக்டவுன் அறிவித்து, அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாகவே இந்த கடுமையான நடைமுறையை சந்தித்து வரும் அந்நாட்டு மக்கள் தற்போது கொந்தளித்து போய் உள்ளனர். இதற்கு ஒரு தீர்வே கிடையாதா என்ற நோக்கில் தெருக்களில் இறங்கி தீவிரமாக போராடி வருகின்றனர்.
பொதுவாக சீனாவில் அரசு உத்தரவுக்கு மறுபேச்சு இல்லாமல் பின்பற்றும் கட்டுக்கோப்பான ஆட்சி அமைப்பே உள்ளது. உள்நாட்டில் போராட்டம் ஆர்ப்பாட்டம் போன்றவற்கு அரசு இடம் கொடுக்காது. ஒருவேளை, எதேனும் அப்படி நிகழ்ந்தால் அதை முளையிலேயே கிள்ளி எறியும் நடவடிக்கையை சீனா அரசு மேற்கொள்ளும்.குறிப்பாக ஜி ஜின்பிங் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி, ராணுவம், ஆட்சி ஆகியவற்றை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அசைக்க முடியாத அதிகார மையமாக உருவெடுத்துள்ளார்.
அப்படி இருக்க சீனா அரசு எதிர்பாராத விதமாக மக்கள் மத்தியில் கொரோனா லாக்டவுனுக்கு எதிராக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பொருளாதார தலைநகராக கருதப்படும் ஷாங்காய் நகரில் நூன்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடி, அதிபருக்கும் அரசுக்கும் எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்."ஜி ஜிங்பிங் பதவி விலக வேண்டும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி கலைய வேண்டும்" என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
Crowd of at least 100 making its way to Tiananmen Square in Beijing on Sunday night, chanting, “We want universal values,” “We want freedom, equality, democracy, rule of law,” “We don’t want dictatorship,” “We don’t want personality cult.” pic.twitter.com/JSW7OHMIAG
— Simina Mistreanu (@SiminaMistreanu) November 27, 2022
மேலும், பல்கலைக்கழகங்களிலும் இளைஞர்கள் திரண்டு போரட்டம் நடத்தி வருகின்றனர். கைகளில் காலி வெள்ளை காகிதத்தை பிடித்து நூதன போராட்டத்தை பலர் நடத்துகின்றனர். காரணம், சீனாவில் எந்த ஒரு செய்தியும் அரசுக்கு எதிராக பிரசுரமாகாத வகையில் சென்சார் செய்து வெளியிடப்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாக இந்த வெள்ளைத்தாள் போராட்டத்தை அவர்கள் நடத்துகின்றனர்.போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான போலீசாரை அரசு களமிறக்கியுள்ளது. மக்களின் போராட்டத்திற்கு பணிந்து அரசு கட்டுப்பாடுகளை விலக்குமா அல்லது தனது படையை வைத்து போராட்டத்தை ஒடுக்குமா என்பது இனி வரும் நாள்களில் தெரியவரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.