அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாட்டு பிரதமர்களையும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸையும் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுடன் இந்த நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு குறித்து தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டதுடன், இந்தியாவிற்கு வருமாறு கமலா ஹாரிஸ்க்கு அழைப்பு விடுத்தார். இன்று குவாட் உச்சிமாநாட்டில் பேசுகிறார் மோடி.
நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேதந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து விவாதித்தார். இருநாடுகளுக்கு இடையே பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேசினர். வணிகம், பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத ஆற்றல் உருவாக்கம் குறித்தும் ஸ்காட் மோரிசனிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி இந்திய நேரப்படி அதிகாலை 12.45 மணிக்கு சந்தித்துப்பேசினார். அப்போது பேசிய மோடி, சிறப்பான வரவேற்பளித்ததற்கு கமலாஹாரிசுக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா 2வது அலையின் துவக்கத்தில் இந்தியாவுக்கு உதவியதற்காக அமெரிக்காவுக்கு நன்றி என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் பைடன்-கமலா ஹாரிசின் தலைமையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் புதிய உயரங்களை தொடும் என்றும் மோடி குறிப்பிட்டார். மேலும் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் இந்தியா வரவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் மிகமுக்கிய பங்காளராக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றின் துவக்கத்தில் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதில் இந்தியா மிகமுக்கிய பங்காற்றியதாக கமலா ஹாரிஸ் நினைவு கூர்ந்தார். இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள கமலா ஹாரிஸ், இந்தியாவில் தினசரி 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவது வியப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் கண்டுபிடிப்பில் எவ்வாறு பங்களிப்பை அதிகரிப்பது என்பது தொடர்பாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது.
கமலா ஹாரிசை சந்தித்தப்பிறகு ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவுடன் பிரதமர் மோடி சந்தித்து பல்வேறு விவகாரங்களை ஆலோசித்தார். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயுள்ள நல்லுறவு, பிராந்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அமெரிக்க அதிபர் பைடனை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குவாட் உச்சிமாநாடு இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னதாக, வாஷிங்டனில் குவால்காம் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கிறிஸ்டியானோ ஆர்.ஆமனுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் அலுவலகம், இருவருக்கும் இடையே பயனுள்ள விவாதம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். 5ஜி மற்றும் பிற டிஜிட்டல் இந்தியா முயற்சிகள் போன்ற துறைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கிறிஸ்டியானோ கூறினார்.
Glad to have met @VP @KamalaHarris. Her feat has inspired the entire world. We talked about multiple subjects that will further cement the India-USA friendship, which is based on shared values and cultural linkages. pic.twitter.com/46SvKo2Oxv
— Narendra Modi (@narendramodi) September 24, 2021
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சு நடத்துகிறார். அப்போது, இருதரப்பு மற்றும் சர்வதேச நிலவரங்கள், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதன்பிறகு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அமைத்துள்ள குவாட் அமைப்பின் மாநாட்டில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
Must Read : திவலாகும் சீனாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட்ட நிறுவனம்.. உலக பொருளாதாரத்தையே புரட்டிப் போடும் அச்சம்
மேலும், ஐநா பொது சபையின் 76-வது கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதையடுத்து, தனது பயணத்தை முடித்துவிட்டு இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamala Harris, Narendra Modi