குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாதிரியார்களின் பாலியல் சீண்டல்கள் வெட்கக்கேடானவை என்று கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ள போப் பிரான்சிஸ், டப்ளின் நகரில் நடைபெற்ற குடும்பத் திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், குழந்தைகளுக்கு எதிரான பாதிரியார்களின் பாலியல் வன்கொடுமை செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, விழாவில் பேசிய போப் பிரான்சிஸ், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாதிரியார்களின் பாலியல் சீண்டல்களை மறைத்தது திருச்சபைகளின் தலைவர்கள், அதிகாரத்தில் இருப்போரின் தவறு. இது கத்தோலிக்க சமூகத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த செயல் தனக்கு மிகுந்த வலியை உண்டாக்கி இருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மின்னணு சாதனங்கள் மனித குலத்துக்கு அபாயகரமானதாக மாறி வருவதாக தெரிவித்தார். உணவு சாப்பிடும் வேளையில் கூட குடும்பத்தினருடன் பேசுவதைத் தவிர்த்து, செல்போன்களை பார்த்துக் கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
இத்தகைய நடவடிக்கைகள் குடும்பங்களை விட்டு மனிதர்களை அந்நியப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். மனிதர்களின் பொன்னான நேரங்கள் செல்போனிலேயே செலவிடப்படுவதாகவும் போப் பிரான்சிஸ் கூறினார். விழாவின்போது நடைபெற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நடன நிகழ்ச்சியையும், இசைநிகழ்ச்சியையும் அவர் கண்டு மகிழ்ந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.