அமைதி நிறைந்த ஒற்றுமையான உலகை கட்டமைக்க மத தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக போன் பிரான்சிஸ் மத்திய கிழக்கு நாடான பஹ்ரைன் சென்றுள்ளார். அங்கு பஹ்ரைன் நாட்டு மன்னர் ஹமத் பின் இசா அல் கலிஃபா ஏற்பாடு செய்துள்ள சர்வமத மாநாட்டில் கலந்து போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். பஹ்ரைன் நாட்டு மன்னரின் ஷாகிர் அரண்மனையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய போப் பிரான்சிஸ், உலகத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்வதையே கடவுள் விரும்புகிறார் என்றும், தனித்தீவுகளாக பிரிந்து கிடப்பதை கடவுள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனவும் குறிப்பிட்டார்.
நாம் கொண்டுள்ள மோதல் போக்கை கைவிட்டுவிட்டு சமரச பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த போப், நம் அனைவரின் நன்மையை கருதி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மனிதம் பிளவுபட்டுக் கிடக்கும் இந்த உலகில் வாழும் தற்போதைய உலகில் நாம் அனைவரும் ஒன்றைணந்து பயணித்தால் ஒழிய கரைசேர மாட்டோம் என போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அமைதியை விரும்பும் மக்கள், ஆயுதங்களையும், போரையும் வெறுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். உக்ரைன்-ரஷ்யா போர் குறித்துப் பேசிய போப் பிரான்சிஸ், போரை நிறுத்திவிட்டு பரஸ்பரம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கான மனித சகவாழ்வு என்கிற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இரண்டு நாள் நிகழ்வில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்கிறார். பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலிஃபாவின் பிரத்யேக அழைப்பின் பேரில் போப் பிரான்சிஸ் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
இதையும் படிங்க: மீண்டும் இஸ்ரேல் பிரதமரானார் பெஞ்சமின் நெதன்யாகு - பிரதமர் மோடி வாழ்த்து
முன்னதாக பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடைபெறும் இந்த சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிசுக்கு பஹ்ரைன் மன்னர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மன்னரின் அரண்மனையில் இருந்த பனைமரத்திற்கு தண்ணீர் ஊற்றினார். போப் பிரான்சிஸ் பஹ்ரைன் நாட்டுக்கு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. போப் ஆண்டவராக பதவியேற்றுக் கொண்ட பிறது போப் பிரான்சிஸ் மேற்கொள்ளும் 39 ஆவது திருப்பயணம் பஹ்ரைன் பயணம் என வாடிகன் தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் அனைவருக்குமான கல்வி, பெண்களின் உரிமைகளுக்கான அங்கீகாரம் மற்றும் குழந்தைக் கல்வியின் அவசியம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.