இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியில் மஹிந்த ராஜபக்சே கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான ஆடியோ ஆதாரமும் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ராஜபக்சே பிரதமராக அறிவிக்கப்பட்ட பிறகும் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் தான் பிரதமராக நீடிப்பதாக ரணில் விக்ரமசிங்கே கூறி வருகிறார். இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருக்கும் விக்ரமசிங்கே கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே வரும் 7-ம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்பிக்கள் உள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஏற்கெனவே ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆட்சியமைக்க ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போதும் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியின் 99 எம்.பி.க்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 எம்.பி.க்களும் வாக்களிக்க உள்ளனர். ஆனால் ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்ட 105 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் மேலும் பல எம்.பி.க்களின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயம் ராஜபக்சேவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் முகாமில் இருந்து எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் சிறிசேனா கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும், அப்படி வாக்களித்தால் அமைச்சர் பதவி தர தயாராக உள்ளதாகவும், ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கட்சியின் எம்.பி. திசநாயகே, ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. பலித ரங்கே பண்டாரவுடன் பேரம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
இதுதவிர தமிழர்களின் ஆதரவை பெறுவதற்காக வேறு சில அறிவிப்புகளை வெளியிட ராஜபக்சே கட்சி தயாராகி வருகிறது. தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக ராஜபக்சேவின் மகனும், எம்.பி.யுமான நமல் கூறியுள்ளார்.
வரும் 7-ம் தேதி நாடாளுமன்றம் கூடுமா? கூடாதா? என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வலியுறுத்தி இலங்கையில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் எனும் கருத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர்.
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.