அமெரிக்காவில் பிரதமர் மோடி - எரிசக்தித் துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை

அமெரிக்காவில் பிரதமர் மோடி - எரிசக்தித் துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை
அமெரிக்காவில் பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: September 22, 2019, 9:34 AM IST
  • Share this:
அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் எரிசக்தித்துறை நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒருவார பயணத்திட்டத்திற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடியின் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டு, பின்னர் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

நேற்றிரவு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அமெரிக்க வாழ் இந்தியர்களும் தேசியக் கொடியை காண்பித்து ஆரவாரம் செய்தனர்.


இதைத் தொடர்ந்து அமெரிக்க எரிசக்தி துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வட்டமேஜை மாநாடு போல நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவில் எரிசக்தி துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து மோடி எடுத்துரைத்தார்.

மேலும், இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும் மோடி அழைப்பு விடுத்தார். அப்போது தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதற்கிடையே, ஹூஸ்டன் நகரின் என்.ஆர்.ஜி. அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "ஹவ்டி மோடி" என்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் இணைந்து பிரதமரும் பங்கேற்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.இதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். நாளை நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டனியோ குட்ரெஸ் ஏற்பாடு செய்துள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கிலும் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

நாளையும், நாளை மறுநாளும் அமெரிக்க அதிபர் டிரம்புடன், பிரதமர் மோடி இருமுறை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்