முகப்பு /செய்தி /உலகம் / பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்த விவகாரம் : போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்... ஈரானில் தொடரும் பதற்றம்!

பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்த விவகாரம் : போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்... ஈரானில் தொடரும் பதற்றம்!

காட்சிப்படம்

காட்சிப்படம்

ஈரானில் பள்ளி செல்லும் பெண்களுக்கு விஷம் கொடுக்கும் சம்பவம் தொடர்கதையாகி உள்ள நிலையில் தற்போது மேலும் 100 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • internationa, IndiaIranIranIran
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Janvi

ஈரான் நாட்டில் மாணவிகள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கும் வண்ணம் சிலர் விஷம் கொடுத்த சம்பவம் தற்போது ஈரானில் பூதாகரமாக வெடித்துள்ளது. ஈரானில் பல மாகாணங்களில் மக்கள் இதனை எதிர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்யக்கோரி அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அவர்கள் பள்ளி செல்லவும், கல்வி பயிலவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்நாட்டைச் சேர்ந்த பழமைவாத அமைப்புகள் பல பெண்கள் கல்வி கற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி சென்ற மாணவிகள் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சோதனையில் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மாணவிகள் பள்ளி செல்வதை எதிர்க்கும் பழமை வாதிகளின் செயலாக இது கருதப்படுகிறது. இதை கண்டித்து அப்போதே நாடு முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட மாகாணங்களில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவிகள் பலர் டெஹ்ரானில் உள்ள கல்வி அமைச்சகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இது வெளிநாட்டுச் சதி என்று மட்டும் கூறியுள்ளார். ஆனால் எந்த நாடு எதற்காக செய்தது உள்ளிட்ட விவரங்களை அவர் குறிப்பிடவில்லை.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த மாத இறுதியில் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஈரான் சுகாதாரத் துறை துணை மந்திரி யூனுஸ், மாணவிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதனிடையே பெண்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் நோக்கில் அவர்களுக்கு விஷம் வைக்கப்படும் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

தலைநகர் தெஹ்ரான் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பெற்றோருடன் பொதுமக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு டெஹ்ரானில் உள்ள கல்வி அமைச்சகம் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பழமை வாதிகள் மற்றும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Also Read : காவலர்கள் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்... 9 காவலர்கள் பலி

ஈரானில் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்படுவதைச் சர்வதேச மனித உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனமான ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் கடுமையாகக் கண்டித்துள்ளது. அதோடு, இது குறித்து ஈரான் அரசு விரிவான மற்றும் விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் ஹிஜாப் விவகாரத்தில் ஈரானில் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் அந்நாட்டை ஸ்தம்பிக்க வைத்த நிலையில், தற்போது மீண்டும் அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்திருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Attack on girls, Iran, School student