சுற்றுச்சூழல் ஆய்வு - இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் மக்கள் நினைப்பது என்ன?

படம்: ஷட்டர்ஸ்டாக்

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் விரும்புவதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பூமியை பாதுகாக்க உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் விரும்புவதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் மாறுபாட்டால் உலகம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. காலநிலை மாறுப்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இது குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, போலந்து, இந்தோனேஷியா, பிரேசில் ஆகிய 7 நாடுகளில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், ஆய்வில் பங்கேற்ற 10 பேரில் 9 பேர் சுற்றுச்சூழல் மாறுபாட்டால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க உலக நாடுகள் ஓரணயில் திரண்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு நாட்டிற்கு இரண்டாயிரம் பேர் வீதம் 7 நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 14 ஆயிரத்து 627 பேரிடம் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசுகள் எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்களில் 10ல் 9 பேர் அரசுகள் இன்னும் போதுமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் 79 விழுக்காட்டினர் சுற்றுசூழலை பாதுகாக்க புதிய திட்டங்கள் உலகளவில் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு வாக்களித்த 55 விழுக்காட்டினர், இயற்கை பேரழிவுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள அமெரிக்க அரசு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பைடனுக்கு வாக்களித்தவர்களில், ஆய்வில் பங்கேற்ற 95 விழுக்காட்டினரும் இதனையே வலியுறுத்தினர்.

இங்கிலாந்திலும் கட்சி வேறுபாடின்றி பூமியை பாதுகாக்க அந்நாட்டு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை, ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒப்புக்கொண்டனர். கன்சர்வேடிவ் ஆதரவாளர்கள் 87 விழுக்காட்டினரும், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 97 விழுக்காட்டினரும் சுற்றுச்சூழல் பாதுக்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்துள்ளனர். இதன்மூலம், உலகளவில் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மக்கள் சிந்திக்க தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை பேண வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒவ்வொரு நாட்டு குடிமகனுக்கும் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு அரசுகள் முன்மாதிரியான திட்டங்களை கொண்டு வரவேண்டும் என நினைப்பதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய கேம்ப்ரிட்ஜில் பணியாற்றும் அரசியல் மனோநிலை நிபுணர் டாக்டர் லீ டீவிட் (Lee de-Wit), பல்வேறு அரசியல் காரணங்களால், சுற்றுச்சூழல் பாதிப்பு நீண்டகால பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

Also read... விமான நிலையமே இல்லாத ஐந்து நாடுகள் - சாலை, ரயில், நீர் வழியாக மட்டுமே பயணம்!

தற்போது, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ள அவர், வரும் காலங்களில் இவை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்க தொடங்கியிருப்பதாகவும் டாக்டர் லீ டீவிட் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை அறிவிக்கும் அரசுகளை மக்கள் விரும்புவது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். காடு, கடல் மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்றும், பருவநிலை மாற்றத்துக்கு காரணமான வாயுக்களை உறிஞ்சும் வகையில் அதிக மரங்களை நட வேண்டும் என ஆய்வில் பங்கேற்ற பலரும் வலியுறுத்தியுள்ளனர். பாலின வேறுபாடு, மதம், தேசம் ஆகியவற்றைக் கடந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் மக்கள் பலரும் சிந்திப்பது, இந்த ஆய்வில் அறிந்து கொள்ள முடிவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: