முகப்பு /செய்தி /உலகம் / சுமையாவை நாங்களே கொன்றோம் – அமெரிக்கா ஒப்புதல்

சுமையாவை நாங்களே கொன்றோம் – அமெரிக்கா ஒப்புதல்

சிறுமி சுமயா

சிறுமி சுமயா

அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல தொலைபேசி அழைப்பை எதிர்நோக்கி காத்திருந்த சுமையாவின் குடும்பத்திற்கு வெடிகுண்டுதான் தலைமேல் விழுந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உங்களுக்கு சுமயாவைத் தெரியுமா... பார்த்தாலே கையில் தூக்கி கொஞ்சத் துடிக்கும் இந்த அழகு குட்டி செல்லத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க வேண்டாம்... ஒழிந்தான் பயங்கரவாதி என அமெரிக்கா ட்ரோன் மூலம் வீசிய வெடிகுண்டில் கருகிப்போன 2 வயது குட்டி மலர்தான் இது.

தாலிபான்களின் அதிகாரக் கால்களுக்கு அடியில் ஆப்கானிஸ்தான் மிதிபடத் தொடங்கிய தருணம்.ஆகஸ்ட் 29ம் தேதி காபூலில் அமெரிக்கர்கள் மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். நாட்டை விட்டு தப்ப உயிரை மட்டும் தூக்கிக் கொண்டு விமான நிலையத்தில் பல்லாயிரம் பேர் காத்துக் கிடக்கிறார்கள்.அண்மையில் ஐஎஸ்-கே பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது வேறு மக்களின் கண்களில் உயிர்பயத்தை விதைத்திருந்தது.

அதேநேரம் விமான நிலையம் அருகிலேயே வாகனம் ஒன்று வீட்டின் அருகே நிற்பதை அமெரிக்க உளவுத்துறை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அந்த வீடு ஐ.எஸ்.-கே. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் இருப்பதாக அமெரிக்காவிற்கு சந்தேகம். காரின் பின்பக்கத்தில் இருந்து ஏதோ இறக்கப்படுகிறது. அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே அதேபோல வெடிகுண்டுகளை இறக்குவதாக அச்சப்படுகிறது அமெரிக்கா. அடுத்த நொடி அமெரிக்க வீரர்கள் ஏவிய ட்ரோன்கள் குண்டுகளை போட சில விநாடிகளில் தகர்க்கப்படுகிறது கார். கொளுந்து விட்டு எரிகிறது தீ.

Also Read: பெரிய தவறு செய்துவிட்டோம் - அமெரிக்கா ஒப்புதல் - மன்னிப்பு கோரியது!

சதித்திட்டத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை அழித்துவிட்டதாக கொக்கரிக்கிறது அமெரிக்கா.அவர்கள் கூறிய பயங்கரவாதிகளில் ஒருத்திதான் இந்த பிஞ்சு சுமயா. இவளோடு மொத்தம் 7 சிறுவர்களும், 3 பெரியவர்களுமாக 10 பேர் கொல்லப்பட்டனர். அறக்கட்டனை ஒன்றில் பணிபுரிந்து வந்த ஜமராய் அகதி தனது மகனுடன் கொல்லப்பட்டார். அமெரிக்கர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்து வந்த நாசரும் வெடிகுண்டில் சிதறிப்போனார்.

அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல தொலைபேசி அழைப்பை எதிர்நோக்கி காத்திருந்த சுமையாவின் குடும்பத்திற்கு வெடிகுண்டுதான் தலைமேல் விழுந்தது.அப்பாவிகள் 10 பேர் இறந்த 20 நாட்களுக்கு பின்பு அது துயரமான தவறு என ஒப்புக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. அதற்காக மன்னிப்பும் கோரியிருக்கிறது.

Also Read: மகளிர்நல அமைச்சகத்தையே கலைத்த தாலிபான்கள் - அட்ராசிட்டி ஆரம்பம்!

கொல்லப்பட்டவர்களின் காரில் இருந்து வெடிகுண்டுகளை இறக்குவதாக அமெரிக்கா சந்தேகப்பட்ட நிலையில், உண்மையில் தண்ணீர் கேன்களையே அந்த குடும்பம் இறக்கியிருக்கிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளை கொன்றோம் என்பார்கள், அல்கொய்தாவினரை கொன்றோம் என்பார்கள் ஆனால் உண்மையில் அப்பாவி மக்களைத்தான் அமெரிக்க வீரர்கள் கொல்வார்கள் என்கிறார் 10 பேரில் உறவினர் ஒருவரை பறிகொடுத்த அகமது ஃபயாஸ். துயரம் நிறைந்த அந்த வார்த்தைகளின் வலியை அனுபவிக்க ஒருவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Afghanistan, America, Drone, ISI terrorist, Taliban