இலங்கையில் இருந்து துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை, விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்யாவசிய உணவு பொருள்கள் பெறவே கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய சூழலில், நாள்தோறும் 15 மணிநேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு போன்ற சிரமங்களை சந்தித்த மக்கள் அரசுக்கு எதிராக வீதியில் களமிறங்கி பெரும் போராட்டங்களை நடத்த தொடங்கினர்.
நாட்டின் இந்த மோசமான சீர்கேட்டிற்கு ஆட்சியில் உள்ள ராஜபக்ச குடும்பமே காரணம் எனக் கூறி பொதுமக்கள் அவர்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால், கோத்தபயவின் குடும்பத்தினர் ராணுவ மற்றும் காவல்துறை பாதுகாப்பில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இலங்கையின் முன்னாள் நிதியமைச்சரும், கோத்தபயவின் சகோதரர்களில் ஒருவருமான, பசில் ராஜபக்ச இன்று காலை துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால், அவரை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள், தாங்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால், பசில் ராஜபக்ச மீண்டும் தனது வசிப்பிடத்திற்கே திரும்பியுள்ளார்.
சமீபத்தில் பொதுமக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் அங்கிருந்து வெளியேறி, கப்பல் ஏறி நடுக்கடலுக்கு சென்ற கோத்தபய, தற்போது இலங்கைக்கே திரும்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அரசியல்வாதிகள் இலங்கையில் இருந்து வெளிநாடுகள் தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
பிரபஞ்சத்தின் ரகசியத்தை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.. ஆச்சர்யப்பட வைக்கும் நாசாவின் புகைப்படம்
அதன்படி, பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகள், விமான நிலையத்தில் பணியில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளனர். இந்நிலையில், அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச நாளை பதவி விலகுவார் எனவும் புதிய அதிபர் வரும் ஜூலை 20ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.