சீன தடுப்பூசி போட்டுக்கொண்ட பாகிஸ்தான் அதிபருக்கு கொரோனா பாதிப்பு!

சீன தடுப்பூசி போட்டுக்கொண்ட பாகிஸ்தான் அதிபருக்கு கொரோனா பாதிப்பு!

அதிபர் ஆரிஃப் ஆல்வி

பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி, பாதுகாப்புத்துறை அமைச்சர் பெர்வேஸ் கதக் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அடுத்து அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானிலும் கடந்த சில நாட்களாகவே தொற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. அங்கு தினசரி பாதிப்பு 4000 - 5000 என்ற அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கு அதிக அளவில் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு மீண்டும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதுவரை 659,116 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,256 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெர்வேஸ் கத்தக் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த மார்ச் 20ம் தேதியன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து இம்ரான் கானின் மனைவிக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இறைவன் கருணை காட்டட்டும்.” என பதிவிட்டுள்ளார். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே கடந்த மார்ச் 15ம் தேதியன்று தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். அவருக்கு சீன நாட்டின் தடுப்பூசி போடப்பட்டதாக தெரியவந்துள்ளது. 2வது டோஸ் தடுப்பூசி இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு செலுத்தப்பட இருந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சிந்து மாகாணத்தில் ஆளுநர் இம்ரான் இஸ்மாயில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெர்வேஸ் கதக்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சீக்கிரமாக குணமடைந்து வாருங்கள் என ஆளுநர் இம்ரான் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆளுநர் இம்ரான் இஸ்மாயில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: