முகப்பு /செய்தி /உலகம் / பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி... ஒரு டாலருக்கு ரூ.255 ஆக சரிவு

பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி... ஒரு டாலருக்கு ரூ.255 ஆக சரிவு

பாகிஸ்தான் நாணய மதிப்பு சரிவு

பாகிஸ்தான் நாணய மதிப்பு சரிவு

20 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வகையில் ஒரே நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 9.6 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaIslamabadIslamabad

கோவிட்-19 பரவல், ரஷ்யா-உக்ரைன் போன்ற நிகழ்வுகளால் உலகின் பல்வேறு நாடுகள் பெரும் பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. வளர்ந்த நாடுகளே நிலைமையை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த நிலையில், பின்தங்கிய நாடுகள், வளரும் நாடுகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின. பொருளாதார நெருக்கடியால் கடந்தாண்டு இலங்கையில் பெரும் போராட்டங்கள் வெடித்து ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழலுக்கு ஆளானது.

இந்நிலையில், இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானிலும் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் கடும் பாதிப்பை கண்டுள்ளது. உணவுப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு விலைவாசி 23 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அரசால் மானிய விலைக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையே 62 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதன் நீட்சியாக பாகிஸ்தான் நாட்டின் நாணயமான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது. 20 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வகையில் ஒரே நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 9.6 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால், ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு பாகிஸ்தானில் 255.4 ரூபாய் என்ற வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது.

அத்துடன் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. தனது மோசமான பொருளாதார சரிவை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட முன்னணி நிதி அமைப்புகளின் கடனுதவியை பாகிஸ்தான் அரசு எதிர்பார்த்து உள்ளது. இருப்பினும் இந்த அமைப்புகள் பாகிஸ்தானுக்கு கடன் தர பெரும் தயக்கம் காட்டி வருகின்றன. அணு ஆயுத வல்லமை படைத்த நாடு, பொருளாதாரத்திற்கு மற்ற நாடுகளை கெஞ்சுவது வெட்க கேடானது என அந்நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கடந்த வாரம் கவலை தெரிவித்தார்.

First published:

Tags: Economy, US dollar