ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை எட்டி இந்தியாவுடன் என்றும் அமைதியான உறவை விரும்புவதாக பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பிரதமர்
மோடியின் வாழ்த்துக்கு பதில் அளித்துள்ளார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரிப் இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்ற ஷெபாஸ்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
தனது வாழ்த்து செய்தியில் பிரதமர், புதிதாக பதவியேற்ற பிரதமருக்கு எனது வாழ்த்துகள். இந்தியா பாகிஸ்தானுடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்புகிறது. பயங்கரவாதம் அற்ற பாகிஸ்தானை உருவாக்கி இரு நாடுகளின் வளர்ச்சியையும் மக்களின் மேன்மையும் உருவாக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த வாழ்த்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளார். அதில், " பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றி. இந்தியாவுடன் அமைதி மற்றும் கூட்டுறவை பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அமைதியான முறையிலான தீர்வை பாகிஸ்தான் விரும்புகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் தியாகம் அனைவரும் அறிந்தது. நமது மக்களின் வளர்ச்சிக்காக அமைதி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம்" எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் 23ஆவது பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார். பதவியேற்ற பின் நாடாளுமன்றத்தில் பேசிய ஷெபாஸ், "பாகிஸ்தானுக்கு புதிய விடியல் பிறந்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாகிஸ்தானை சீரமைக்கும். இந்தியவுடன் நிரந்தர அமைதியை பாகிஸ்தான் விரும்புகிறது. காஷ்மீர் விவகாரம் தீராத வரை அதற்கு சாத்தியம் இல்லை" என தெரிவித்திருந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.