ரயிலில் கேஸ் சிலிண்டர் மூலம் சமையல் - 73 பேர் உயிரிழந்த விபத்தின் பின்னணி

ரயிலில் கேஸ் சிலிண்டர் மூலம் சமையல் - 73 பேர் உயிரிழந்த விபத்தின் பின்னணி
விபத்தில் பற்றி எரியும் ரயில்
  • News18
  • Last Updated: November 1, 2019, 7:35 AM IST
  • Share this:
பாகிஸ்தான் பயணிகள் ரயிலில் சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி - ராவல்பிண்டி இடையே இயக்கப்பட்டு வருகிறது தேஸ்காம் பயணிகள் ரயில். பாகிஸ்தானில் மிகவும் பழமையானதாகவும் பிரபலமானதாகவும் கருதப்படும் இந்த ரயில் வழக்கம்போல் இன்றும் இயக்கப்பட்டது.

ரகிம் யார் கான் என்ற இடத்தை ரயில் கடந்த போது, பயணிகள் இருந்த பெட்டியில் திடீரென தீப்பற்றியது. பயணிகள் சிலர் காலை உணவு சமைக்க முயற்சித்த போது, தீவிபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.  காற்றின் வேகத்தால் தீ அடுத்தடுத்து இருந்த 3 பெட்டிகளுக்கும் பரவியது. இதனால் பயணிகளிடையே பதற்றம் அதிகரித்தது. சிலர் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்ற போது தீயில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வரிசையாக 3 பெட்டிகளுக்கு தீ பரவியதால் பெரும் புகை மண்டலம் ஏற்பட்டது. ரயில் பெட்டி பற்றியெரியும் ஓசை, பயணிகளின் கதறல் என அப்பகுதியில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது.


விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர், மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தோரின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்துபோனவர்களில் பலரது உடல் அடையாளம் காணமுடியாத அளவிற்கு கருகியுள்ளதால்,  மரபணு சோதனையும் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் பெரும்பாலனோர், லாகூரில் நடைபெறும் மதவழிபாட்டு நிகழ்ச்சிக்கு சென்ற யாத்ரீகர்கள் என்றும், இவர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில் சேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான்,விபத்துக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.  விபத்து தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இம்ரான்கான் கூறியுள்ளார்.

First published: November 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்