இந்திய விமானங்கள் பறக்க தடை?... பாகிஸ்தான் திட்டம்

news18
Updated: August 28, 2019, 8:46 AM IST
இந்திய விமானங்கள் பறக்க தடை?... பாகிஸ்தான் திட்டம்
விமானம்
news18
Updated: August 28, 2019, 8:46 AM IST
பாகிஸ்தான் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதேபோல, தங்களது நாட்டின் சாலை வழியாக ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் செய்யவும் தடைவிதிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு நீக்கியதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கையை அடுத்து இந்தியாவுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. மேலும் இந்தியாவுடனான ரயில் மற்றும் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் வான் எல்லையை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கலாம் என்று பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்ததாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மோடி தொடங்கியதை தாங்கள் முடிக்க உள்ளதாகவும் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். இந்திய விமானங்களுக்கு தடைவிதிப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டபோதும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு வான் எல்லையை பயன்படுத்த தடைவிதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இதன்படி தடையை நாளை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Loading...இதேபோல ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்துக்கு பாகிஸ்தானின் சாலையை இந்தியா பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தங்களது நாட்டின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆப்கானிஸ்தான் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக பாலகோட்டில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான் எல்லையை இந்தியா பயன்படுத்த கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் ஜூலை வரை தடைவிதிக்கப்பட்டது.

அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு நாள்தோறும் 50 விமானங்களை பாகிஸ்தான் வழிவாக ஏர் இந்தியா இயக்கி வருகிறது. இதேபோல, தனியார் நிறுவனங்களும் இயக்கி வருகின்றன. கடந்த முறை விதிக்கப்பட்ட தடையால் மாற்றுப்பாதையில் விமானங்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு 575 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதேபோல பாகிஸ்தானுக்கு 360 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போதைய நடவடிக்கைகளும் இருதரப்புக்கும் இழப்பை ஏற்படுத்தும்.

இதனிடையே காஷ்மீர் எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புப் படை கமாண்டோக்களை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தியுள்ளது. இதனை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

also watch

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...