பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்த உத்தரவு செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் இம்ரான் கான் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது அதிபர் ஆரிப் ஆல்வியின் உத்தரவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. பிரதமர் இம்ரான் கான் அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் என்றும், அதனால் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அதிபர் ஆரிப் அல்விக்கு அவர் அறிவுறுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
இதையும் படிங்க - ரஷ்யா தாக்குதல்: குழந்தையின் முதுகில் குடும்ப விவரங்கள்.. மனதை கனக்க வைக்கும் உக்ரைன் தாய்மார்களின் பதிவுகள்!
மேலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் ரத்துச் செய்யப்பட்டது, அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது.
இதையடுதது நாளை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தனது கட்சி ஏற்கும் என்று இம்ரான் கான் கூறி இருக்கிறார்.
இம்ரான் கானுக்கு எதிராக நாளை வாக்கெடுப்பு
அதன்படி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை பட்டாசு வெடித்து எதிர்க்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.