காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்நிலையில், எல்லையில் நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 6 பேர் உயிரிழந்ததாக பொய்யான தகவல்களை பாகிஸ்தான் பரப்பிவருவதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கிய மத்திய அரசு, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் வேண்டுகோளின்படி, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால், எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல கொள்கை அடிப்படையில் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் எடுத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, இரு நாட்டு எல்லையில் உள்ள டட்டா பானி பகுதியில் இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இந்திய ராணுவம் தரப்பில் அதிகாரி ஒருவர் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கஃபூர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய ராணுவ அதிகாரிகள், பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த சண்டையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், தவறான தகவல்களை தெரிவித்து சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாகிஸ்தானைப் போன்று, உயிரிழப்புகள் குறித்த தகவல்களை இந்திய ராணுவம் மறைப்பதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian army, Pakistan Army