PAKISTAN PM IMRAN KHAN WINS TRUST VOTE IN NATIONAL ASSEMBLY ARU
பாகிஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியது இம்ரான் கான் அரசு!
இம்ரான் கான்
முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக கூட்டணி கட்சி எம்.பிக்களை அழைத்து பேசிய பிரதமர் இம்ரான் கான், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் நடைபெற்ற செனட் சபை தேர்தலில் பிரதமர் இம்ரான் கானின் அரசில் நிதியமைச்சராக இருக்கும் அப்துல் ஹபீஸ் ஷேக் அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியை தழுவினார். இதன் காரணமாக பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கை போய்விட்டது, எனவே அவர் பதவி விலக வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தின. மேலும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அழுத்தம் தரப்பட்டது. இதனையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் இன்று கொண்டு வந்தார். அந்நாட்டின் அதிபர் ஆரிஃப் அல்வி மேற்பார்வையில் இன்று தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது.
342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் 172 வாக்குகள் மெஜாரிட்டிக்கு தேவை என்ற நிலை எழுந்தது. இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் எதிர்கட்சிகள் புறக்கணித்தன. பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற பெயரிலான எதிர்கட்சி கூட்டணியில் மொத்தம் 11 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் 178 வாக்குகள் கிடைத்ததால் பிரதமர் இம்ரான் கானின் அரசுக்கான ஆபத்து நீங்கியது,
ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கு 157 உறுப்பினர்கள் உள்ளனர், இதனிடையே ஃபைசல் வோவ்டா தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அக்கட்சியின் பல 156 ஆக குறைந்தது. ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தலைமையிலான கூட்டணியில் Muttahida Qaumi Movement (MQM), Pakistan Muslim League-Q (PML-Q), Awami Party (BAP) போன்ற கட்சிகள் இடம்பிடித்துள்ளன. இவற்றின் மொத்த பலம் 180 ஆக இருந்தது. அதே போல எதிர்கட்சி கூட்டணியின் பலம் 160 ஆக உள்ளது.
முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக கூட்டணி கட்சி எம்.பிக்களை அழைத்து பேசிய பிரதமர் இம்ரான் கான், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்தார். இதையே கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் ஆளும் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கிரிக்கெட்டராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் 68 வயதாகும் இம்ரான் கான், பாகிஸ்தானின் 22வது பிரதமராக 18 ஆகஸ்ட் 2018 முதல் இருந்து வருகிறார்.