பாகிஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பு ஏற்றதில் இருந்தே தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானுக்கு பல சிக்கல்கள் இருந்துவருகிறது. பல்வேறு சவால்களுக்கிடையே ஆட்சியை நகர்த்தி வந்தார். ஆனால் இம்ரான்கானின் தலைமையிலான ஆட்சியில் பாகிஸ்தானின் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்தது.
இதற்கு இம்ரான் கான் தான் காரணம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்து, இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற முடியாமல் பிரதமர் பதவியை இழந்தார்.
எதிர்க்கட்சியின் ஷபாஸ் ஷெரீப் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் இம்ரான்கானுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக இம்ரான்கான் பிரதமராக இருந்த போது, வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து பெற்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் ஆஜராக முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டை பிறப்பித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இஸ்லாமாபாத் போலீசார், அவரை கைது செய்ய லாகூரில் உள்ள வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றனர். ஆனால் வீட்டின் முன்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பிடிஐ கட்சி தொண்டர்கள் போலீசாரை உள்ளே அனுமதிக்க மறுத்த நிலையில் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர்.
ஆனால் அங்கு இம்ரான்கான் இல்லை. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்து சென்றனர். அடுத்த சில மணி நேரங்களில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் லாகூரில் உள்ள வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். இது போலீசாரை அதிர்ச்சியடையச் செய்தது. போலீசார் மீண்டும் லாகூரில் உள்ள இம்ரான்கான் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் அப்போதும் பிடிஐ கட்சி தொண்டர்கள் போலீசார் வீட்டுக்குள் நுழைய கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டர்களின் எதிர்ப்பால் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் வெறுங்கையுடன் திரும்பினர்.
போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி இம்ரான் கான் தனது வீட்டின் சுவரை ஏறிக்குதித்து பக்கத்து வீட்டிற்கு சென்று அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தெரிவிக்கவே காவல்துறை அதிகாரிகள் இம்ரான் கான் வீட்டிற்குச் சென்றதாகவும், ஆனால் வெட்கம் இல்லாமல் ஏகப்பட்ட நாடகத்தை நடத்தியுள்ளதாகவும் சனாவுல்லா குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தனே அன்றி, அவரை கைது செய்வது அரசின் நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட சனாவுல்லா, நீதிமன்றத்தில் இம்ரான்கான் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Also Read : சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க புதிய சட்டம்... இங்கிலாந்து அரசு அதிரடி நடவடிக்கை
கைது செய்யப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற இம்ரான்கானின் கோரிக்கையை இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது. லாகூர் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படுவதற்குத் தடை கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டுள்ள நேரில் ஆஜராக வேண்டும் என்பதற்காகவே இந்த பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தானாக நேரில் சரணடையும் வரை கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இம்ரான்கானுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Imran khan