பாகிஸ்தானில் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்னதாக தனது உறுப்பினர் பதவியை இம்ரான் கான் ராஜினாமா செய்தார். இதேபோல், உடனடியாக பிரதமர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இம்ரான் கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரிப் பதவியேற்றுள்ளார். அதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இம்ரான் கான் ராஜினாமா செய்தார். தனது முடிவு தொடர்பாக இம்ரான் கான் வெளியிட்டுள்ள பதிவில், 160 கோடி ரூபாய், 80 கோடி ரூபாய் போன்ற ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு நாட்டின் பிரமதரை தேர்வு செய்கிறார்கள். இது நாட்டிற்கே பெரும் அவமானம். எனவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றுள்ளார்.
இம்ரான் கானின் இந்த முடிவு தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கூறுகையில், 'கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக இம்முடிவை எடுத்துள்ளோம். வரும் புதன்கிழமை இம்ரான் கான் பெஷாவர் செல்கிறார். அப்போது அவர் மக்களை திரட்டி நாட்டிற்கு எதிராக நடைபெறும் வெளிநாட்டு சதியை எடுத்துரைப்பார்' என்றார்.
இம்ரான் கானை போலவே அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 1947ஆம் ஆண்டு புதிய நாடாக பாகிஸ்தான் உருவானதில் இருந்து இதுவரை ஒரு பிரதமரும் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்ததில்லை.
இதையும் படிங்க: பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு
பலமுறை ஆட்சி மாற்றங்களும் ராணுவ ஆட்சியும் அங்கு அரங்கேறியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது பதவியை இழக்கும் பாகிஸ்தானின் முதல் பிரதமர் இம்ரான் கான் தான். தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் சதி செய்வதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார்.
தனது அரசின் சுதந்திரமான வெளியுறவுக்கொள்கை அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. தான் ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுவது அமெரிக்காவுக்கு உறுத்தலாக உள்ளதால், தனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி வேலை செய்தது என இம்ரான் தொடர்ந்து கூறுகிறார்.
மேலும் படிக்க: ட்விட்டரில் அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.!
மேலும், பாகிஸ்தானில் உடனடியாக பிரதமர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நாங்கள் உடனடியாகத் தேர்தலைக் கோருகிறோம், அதுதான் ஒரே வழி -- நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்கள் மூலம் மக்கள் யாரை பிரதமராக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.