முகப்பு /செய்தி /உலகம் / பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழை.. வெள்ளக்காடான 110 மாவட்டங்கள் - 1200-ஐ தாண்டிய உயிரிழப்பு

பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழை.. வெள்ளக்காடான 110 மாவட்டங்கள் - 1200-ஐ தாண்டிய உயிரிழப்பு

பாகிஸ்தான் வெள்ளம்

பாகிஸ்தான் வெள்ளம்

வாகனங்கள் எதுவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் செல்ல முடியாததால், மீட்புப் பணியில் ஈடுபடுவது சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Inter, IndiaPakistan Pakistan Pakistan Pakistan

பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  1200-ஐ கடந்துள்ளது. தொடர் மழை காரணமாக, 4 மாகாணங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

பருவநிலை மாற்றம், தென்மேற்குப் பருவமழை ஆகியவற்றின் காரணமாக, கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத வகையில், பாகிஸ்தானில் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் மழையால், கைபர் பக்துன்வா, பஞ்சாப், பலுசிஸ்தான் மற்றும் சிந்து ஆகிய மாகாணங்களில் உள்ள 110 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

தொடர் மழையால், 57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து உணவுக்கு கூட வழியில்லாமல் பரிதவித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் பருவமழை மற்றும் வெள்ளப் பாதிப்பில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 1,200 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிந்து மாகாணத்தில் உள்ள ஷதாட்கோட் புறநகர்ப் பகுதியில் மழை நின்ற போதும், வெள்ள நீர் வடியாமல், குட்டித் தீவுபோல் காட்சியளிக்கிறது. இடுப்பளவு தண்ணீரை கடந்து சென்றே, பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஹின்னம்னோர் புயல், ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதி மற்றும் சீனாவின் கிழக்கு கடல் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும், 2022-ம் ஆண்டில் மிகப்பெரிய புயலாக இது இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால் ஜப்பானில் ஆங்காங்கே கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

ஜப்பானின் ஹமாமட்சு பகுதியில் பெய்த கனமழையால், அங்குள்ள மாகோம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புக்குள் நீர் புகுந்தது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹமாமட்சு பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், வாகனங்கள் எதுவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் செல்ல முடியாததால், மீட்புப் பணியில் ஈடுபடுவது சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Flood, Heavy Rainfall, Japan, Monsoon rain