Home /News /international /

அட்டாரி எல்லையில் பிறந்த குழந்தைக்கு "பார்டர்" என பெயர் வைத்த பாகிஸ்தான் தம்பதியர்

அட்டாரி எல்லையில் பிறந்த குழந்தைக்கு "பார்டர்" என பெயர் வைத்த பாகிஸ்தான் தம்பதியர்

பாகிஸ்தான் குழந்தை

பாகிஸ்தான் குழந்தை

பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து தம்பதிகள் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு பார்டர் என்று பெயர் வைத்துள்ளனர்.

    பாகிஸ்தானில் வசிக்கும் இந்து தம்பதிகளான நிம்பு பாய் மற்றும் பாலா ராம் ஆகியோருக்கு கடந்த டிசம்பர் 2ம் தேதி அன்று, அட்டாரி எல்லையில் புதிதாக ஒரு குழந்தை பிறந்தது. இவர்கள் தங்கள் அடையாளத்தை தீர்மானிக்க தேவையான ஆவணங்கள் இல்லாததால் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக அட்டாரி எல்லையில் சிக்கித் தவித்து வருகின்றனர். சர்வதேச எல்லையில் குழந்தை பிறந்ததால் இந்த தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு 'பார்டர்' என்ற பெயரை சூட்டியுள்ளனர். இந்த குழந்தை இவர்களுக்கு 5வது குழந்தை ஆகும்.

    இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்த தந்தை பாலா ராம் கூறியதாவது "அட்டாரி எல்லையில் நாங்கள் படும் கஷ்டங்களை, குறிப்பாக வீடு கூட இல்லாமல் குளிர்ந்த இரவுகளை திறந்த வெளியில் கடத்துவதை எப்பொழுதும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் எனது குழந்தைக்கு பார்டர் என்று பெயரிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    ஆனால், மேலும் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால், ஐந்து குழந்தைகளில் கடைசியாக இந்தியாவில் பிறந்த அவர்களது மகன் 'பார்டர்'க்கும், தம்பதியருக்கும் பாகிஸ்தானில் நுழைவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் மறுத்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் மீண்டும் நுழைவதற்கான தேவையான ஆவணங்களும் தம்பதியிடம் இல்லாததால் மேலும் தவித்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிம்பு பாய்க்கு டிசம்பர் 2ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள பஞ்சாப் கிராமங்களைச் சேர்ந்த சில பெண்களின் உதவியுடன் தனது குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் அந்த தம்பதியினர் தகவல் அளித்துள்ளனர்.

    நிம்பு பாய் மற்றும் அவரது கணவர் பாலா ராம் முதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ராஜன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தற்போது 98 பாகிஸ்தான் குடிமக்களுடன் அட்டாரி எல்லையில் சிக்கியுள்ளனர். அவர்கள் புனித யாத்திரை மற்றும் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காக இந்தியா வந்ததாக தெரிகிறது.

    குழந்தையை பிறப்பு பற்றி, உள்ளூர் வழக்கறிஞர் நவ்ஜோத் கவுர் சப்பா கூறியதாவது, 'பார்டர்' எஸ்எஸ்பி கிராமப்புறத்திலிருந்த ஒரு பகுதியில் பிறந்ததால் அதற்கும் போக்குவரத்து விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று வெளிப்படுத்தினார். குழந்தைக்கு டிரான்சிட் விசா முறையாகப் பெறப்பட்ட பிறகு, அது வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். பின்னர் அமைச்சகம் குடும்பத்தை பாகிஸ்தானில் உள்ள அவர்களது வீட்டிற்கு நாடு கடத்துவதற்கான முறையான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும் எனவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்ற மற்றொரு வழக்கை மேற்கோள் காட்டிய உள்ளூர் வழக்கறிஞர் நவ்ஜோத் கவுர் சப்பா, ஹீனா என்ற பெண் குழந்தையைப் பற்றி பேசினார். ஹீனா அமிர்தசரஸ் மத்திய சிறையில் பிறந்தார். பின்னர் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது தங்களது குழந்தை பார்டருடன் தங்கள் சொந்த நாட்டிற்கு எப்படி திரும்புவது என்று தெரியாமல் இருவரும் தவித்து வருகின்றனர்.
    Published by:Archana R
    First published:

    அடுத்த செய்தி