ஒரே பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் உள்ள கலோனியா ஹை ஸ்கூல் என்ற மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரியவகை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி நியூ ஜெர்சியில் உள்ள வுட்பிரிட்ஜ் என்ற பகுதியில் உள்ளது.
இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் அல் லுபியானோ. இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன் அரியவகை மூளை கட்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரியவகை புற்றுநோய் கட்டி glioblastoma என அழைக்கப்படுகிறது.
இவர் இந்த நோயுடன் 20 ஆண்டுகள் போராடி தற்போது மீண்டு வந்துள்ளார். அதேவேளை, இவரது சகோதரி மற்றும் மனைவி ஆகியோருக்கும் இதே வகை அரிய புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு, இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இவரது மனைவி சமீபத்தில் தான் உயிரிழந்துள்ளார். இதையடுத்து லுபியானோவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக இவர் ஆய்வில் களமிறங்கியுள்ளார். அதில் 1975ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை இந்த பள்ளியில் படித்த 102 பேருக்கு இதே வகை அரிய வகை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மர்மத்தை கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என லுபியானோ உறுதியாக உள்ளார்.
Also Read : ட்விட்டருக்கு விலை பேசும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்
அமெரிக்க மூளையியல் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த அரிய வகை நோய் லட்சத்தில் 3 பேருக்கு தான் ஏற்படும். ஆனால் ஒரே பள்ளியைச் சேர்ந்த பலருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது பள்ளி நிர்வாகத்தினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வுட்பிரிட்ஜ் பகுதி மேயர் ஜான் மெகோர்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதன் பின்னணியில் பெரிய பிரச்னை இருக்க வாய்ப்புள்ளது. இப்பகுதி மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். அசாதாரண விஷயமான இதன் ஆழம் கண்டறியப்பட்டு மக்களுக்கு உண்மை தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய பள்ளி நிர்வாக அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளியின் 28 ஏக்கர் வளாகத்தை ரேடியாலஜி சோதனைக்கு உட்படுத்த அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் ரேடான் வாயு அங்கு உள்ளதா என்ற சோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
ரேடான் என்ற வாயு நுரையீரல் புற்று நோய் ஏற்படுத்தும். இதற்கு நிறம், மனம் ஏதுமில்லை. இந்த வாயுவின் கசிவானது வீடுகள், பள்ளிகள், வேலையிடங்களில் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் ஆண்டு தோறும் 21,000 பேர் இந்த வாயு ஏற்படுத்தும் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
- கண்ணன் வரதராஜன்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.