முகப்பு /செய்தி /உலகம் / ஒமிக்ரான் வைரஸால் அதிக பாதிப்பைச் சந்திக்கும் அமெரிக்கா: 10 லட்சம் உயிரிழப்பை எட்டும் எச்சரிக்கை

ஒமிக்ரான் வைரஸால் அதிக பாதிப்பைச் சந்திக்கும் அமெரிக்கா: 10 லட்சம் உயிரிழப்பை எட்டும் எச்சரிக்கை

Corona Deaths

Corona Deaths

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுவருகிறது.

  • Last Updated :

கொரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது.

டெல்டா அலை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், ஒமைக்ரான் என்ற வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸின் பரவல் வேகம் டெல்டா வைரஸை விட தீவிரமாக இருந்தது. அதனால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் மிக வேகமாக பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இருப்பினும், ஒமிக்ரான் வைரஸின் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதன் பாதிப்பின் தீவிரம் குறைவாக இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். அதேபோல, இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸின் தீவிரம் குறைவாகவே இருந்துவருகிறது. இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 20 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆனால், அமெரிக்காவில் இந்த நிலை முற்றிலும் வேறுவிதமாக உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் 8,78,000-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 2,000-த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துவருகின்றனர். இந்த இறப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என்று இரு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு குறித்து பேசிய கலிபோர்னியா பல்கலைக்கழக பொதுச் சுகாதாரத்துறை பேராசிரியர் அண்ட்ரூ நோய்மெர், ‘ஒமிக்ரான் பாதிப்பால் 10 லட்சம் பேர் இறக்கும் சூழல் ஏற்படும். நாம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது குறித்து ஏராளமான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.

Also read: மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா? சீனாவின் எச்சரிக்கைக்கு ஐ.நா பதில்

நம்மால் எத்தனை உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என்று விவாதங்கள் நடைபெறுகிறது. ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறி லேசாகவே உள்ளது. பாதிக்கப்படும் பலருக்கு அறிகுறிகள் காட்டுவதே இல்லை என்பது ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், ஃப்ளூ வைரஸ் போல இதுவும் உயிர்கொல்லி. குறிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இது ஆபத்து’ என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CoronaVirus, Omicron