ரயில் நிலையங்களில் டீ விற்றதன் மூலம் வறுமையை அறிந்தேன்: சவுதியில் பிரதமர் மோடி பேச்சு

ரயில் நிலையங்களில் டீ விற்றதன் மூலம் வறுமையை அறிந்தேன்: சவுதியில் பிரதமர் மோடி பேச்சு
  • Share this:
வறுமையை புத்தகங்களில் இருந்து இல்லாமல், ரயில்வே நிலையங்களில் டீ விற்றதன் மூலம் அறிந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டுக்கான தொடக்கம் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது கேள்வி பதில் நேரத்தில் பேசிய பிரதமர் மோடி, தான் மிகப்பெரிய அரசியல் கட்சியைச் சேர்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவரல்ல என்றும், ரயில் நிலையங்களில் டீ விற்றதன் மூலம் வறுமையை அறிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.


வறிய மனிதர் ஒருவர், தன்னால் வறுமையை ஒழிக்க முடியும் என்றால் அதைவிட பெரிய தியாகம் எதுவும் இல்லை என்றும் அப்படிப்பட்ட ஒருவருக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

சவுதியில் ஒப்பந்தம்:

ஒரு நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சவுதி அரேபியாவின் எரிசக்தி, வெளியுறவு விவகாரம், சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஜோர்டான் மன்னரை நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.இதையடுத்து, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் சவுத்-துடன் இருதரப்பு பேச்சு நடத்தினார். அப்போது, தீவிரவாத செயல்களுக்கு இரு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். பிரதமருக்கு சவுதி அரேபிய மன்னர் மதிய விருந்து அளித்து கவுரவித்தார்.

இதன் பின்னர், எதிர்கால முதலீட்டுக்கான முன்முயற்சிகள் அமைப்பின் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர், 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு தொடர்பான திட்டங்களில் 7 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.

சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம், ஆசியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தில் முதலீடு செய்ய இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் கூறினார். அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் திறன்மிகு இந்தியா திட்டத்தின்கீழ், 40 கோடி பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக நரேந்திர மோடி உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை மோடி சந்தித்தார். இருதரப்பு உயர் அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது, இருதரப்புக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மற்றும் சவுதி அரேபிய இளவரசர் தலைமையிலான இந்தக் குழு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடி, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தும்.

இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, ராணுவ தொழிற்சாலைகள், சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து, சவுதி அரேபிய பயணத்தை முடித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி டெல்லிக்கு புறப்பட்டார்.


First published: October 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்