வட கொரியா முதல் தான்சானியா வரை: கொரோனா பாதிப்பு குறித்த உண்மை தகவல்களை கொடுக்காத நாடுகள்!

வட கொரியா முதல் தான்சானியா வரை: கொரோனா பாதிப்பு குறித்த உண்மை தகவல்களை கொடுக்காத நாடுகள்!

கொரோனா வைரஸ்

சுமார் ஓராண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல்களை தான்சான்யா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகள் உலக சுகாதார மையத்துடன் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளவில்லை.

  • Share this:
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பிறகு வைரஸின் பரவல் தன்மை குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸின் தீவிரம் மற்றும் அதன் பரவல் தன்மையை அறிந்துகொள்ளவும், உரிய நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் ஒன்றிணைந்து தங்கள் நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை முழுவதையும் உலக சுகாதார மையத்துடன் பகிர்ந்து கொண்டனர். இதன் விளைவாக கொரோனா வைரஸ் தடுப்பூசிகள், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் அதிகளவில் உற்பத்தி செய்து அனுப்பி வைத்து வருகின்றன.ஆனால், சுமார் ஓராண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல்களை தான்சான்யா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகள் உலக சுகாதார மையத்துடன் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளவில்லை.

உலக சுகாதார மையம் பலமுறை அறிவுறுத்தியும் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதங்களை கொடுக்க அந்த நாடுகள் மறுத்து வருகின்றன. தான்சானியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்ட இருவர் தென் ஆப்பிரிக்காவில் பரிசோதித்தபோது அவர்கள் இருவருக்கும் B.1351 வேரியண்ட் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தகவல் குறித்து பகிர்ந்து கொள்ளுமாறும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் உலக சுகாதார மையம் வெளிப்படையாக தான்சானியாவுக்கு அறிவுறுத்தியது. இதனை நிராகரித்த தான்சானியா அதிபர் மகூபூலி (Magufuli), கொரோனா வைரஸூக்கு இயற்கை முறை மருத்துவத்தை மேற்கொள்ளுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த கொடிய வைரஸில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் கடவுளை வழிபடுமாறு கூறியுள்ளார். அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சரும் இதனை வழிமொழிந்துள்ளார்.

இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தனிமனித இடைவெளி மற்றும் மாஸ்க் அணியுமாறு அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை தான்சானியாவுக்கான அமெரிக்க தூதரகம் உறுதிசெய்துள்ளது. இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து மாஸ்க் இறக்குமதி செய்ய அந்நாடு விரும்பவில்லை. சொந்த நாட்டில் தயாரிக்கப்படும் மாஸ்க்குகளை மட்டுமே அணியுமாறு அந்த நாட்டு அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். இதபோல், துர்க்மெனிஸ்தானும் இதுவரை கொரோனா குறித்த தகவல்களை வெளிப்படையாக பகிரந்துகொள்ளவில்லை. இதனால், அந்த நாட்டுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவை இதுவரை அந்த நாடு ஒரு தொற்றுநோயாக அறிவிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேரியா, காலரா போன்ற காய்ச்சல் வகைகளில் இதுவும் ஒன்று என்ற ரீதியில் மக்களிடையே அந்நாட்டு அரசு கூறிவருவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, துர்க்மெனிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதை அந்நாட்டுக்கான அமெரிக்க தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது. ஐரோப்பாவில் வாழும் துர்க்மெனிஸ்தான் அகதிகள் அமைப்பு, அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலை மிக மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளது. இதுவரை கொரோனாவை ஒரு நோயாக அந்த நாடு அங்கீகரிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த அமைப்பு கூறியுள்ளது. தங்களுடைய தகவல்படி 3, 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் துர்க்மெனிஸ்தான் அகதிகள் அமைப்பு கூறியுள்ளது. தொலைக்காட்சிகள் உள்ளிட்டவை அரசின் பிடியில் இருப்பதால், எந்த தகவலும் வெளி உலகுக்கு தெரியவதில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. உலக சுகாதார அமைப்புக்கு இதுவரை ஒரு கொரோனா வைரஸ் தகவல்களை கூட அந்த நாடு கொடுக்கவில்லை. இருப்பினும் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இதேபோல், மற்றொரு நாடான வட கொரியாவும் கொரோனா வைரஸ் குறித்த தகவலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. சீனாவுடன் பெரும் எல்லைப் பரப்பை பகிர்ந்து வரும் அந்த நாடு தங்கள் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் பரவவில்லை என தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேவேளையில், நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகளையும் முழுமையாக மூடி உள்ளது. வட கொரியாவின் கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இன்றளவும் மர்மமாகவே இருந்து வருகிறது.
Published by:Ram Sankar
First published: