• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சீன எல்லையில் ஊடுருவல் நடந்ததா? உள்துறை - பாதுகாப்புதுறை அமைச்சகங்களின் பதில்கள் முரண்படுகிறதா?

சீன எல்லையில் ஊடுருவல் நடந்ததா? உள்துறை - பாதுகாப்புதுறை அமைச்சகங்களின் பதில்கள் முரண்படுகிறதா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்திய - சீன எல்லையில் கடந்த ஆறு மாதங்களில் எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது.

  • Share this:
    சீன எல்லையில் நடைபெற்ற ஊடுருவல் தொடர்பாக மாநிலங்களவை எம்.பி அனில் அகர்வால் எழுத்து மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளித்தார்.

    அந்த பதிலில், ‘இந்திய- சீன எல்லையில் கடந்த ஆறு மாதங்களில் எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை. ஃபிப்ரவரியிலிருந்து 47 முறை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவல் முயற்சி நடைபெற்றது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மே மாதத்திலிருந்து இந்திய - சீன எல்லையில் பிரச்னை நீடித்துவரும் நிலையில் மத்திய அமைச்சகத்தின் விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்குள் யாரும் ஊடுருவவில்லையென்றால், ஏன் சீனாவிடம் எல்லை விவகாரத்தில் பழைய நிலையையே கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்திவருகிறீர்கள்? எதற்காக அதிகாரிகள் தரப்பிலான கூட்டங்கள் நடைபெற்றது? என்று கேள்வி எழுந்துள்ளது.

    முன்னதாக, நேற்று நாடாளுமன்றத்தில் பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘சீன எல்லையின் மேற்குப் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தை மீறுவதற்கு பல்வேறு முறை முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அந்த முயற்சிகள் இந்தியப் படையால் முறியடிக்கப்பட்டன’ என்று தெரிவித்தார். இருப்பினும், சீனப் படைகள் தற்போது எந்தப் பகுதியில் இருக்கின்றன என்பதை விளக்கவில்லை. நேற்று, சீன எல்லையில் எல்லைக் கட்டுப்பாட்டை மீற சீனப் படைகள் முயன்றது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் விளக்கியிருந்தநிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதில் முரணாக உள்ளது என்று கேள்வி எழுந்தது.

    இதுகுறித்து விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், ‘பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கமும் உள்துறை அமைச்சகத்தின் பதிலும் முரணாக இல்லை. ஊடுருவல் என்ற வார்த்தைப் பதம், தீவிரவாதிகள் அல்லது எதிரிகள் நம்முடைய பகுதிக்குள் நுழைவதையே குறிக்கும்’ என்று விளக்கியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: