பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இங்கிலாந்துக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த தடை ஏதும் இல்லை என்று இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடான சான்றுகளை அளித்து அதன் மூலம் சுமார் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக தெரியவந்தது. அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன. இந்த நிலையில் லாவோசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற அவர் அதன் பிறகு நாடு திரும்பவில்லை அங்கிருந்து இங்கிலாந்துக்கு நீரவ் மோடிதப்பிச் சென்றார். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்து காவல்துறை அவரை லண்டனில் கடந்த 2019 ம் ஆண்டு மார்ச்சில் கைது செய்தது. அதே போல அவருக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். விலையுயர்ந்த பொருட்களையும் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்காக சட்ட ரீதியிலான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சாமுவேல் கூஸ் இன்று தீர்ப்பை வழங்கினார்.
அதன்படி நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த தடை ஏதும் இல்லை என தீர்ப்பளித்தார்.
நீதிபதி சாமுவேல் கூஸ் அளித்த தீர்ப்பில் கூறியதாவது, “நீரவ் மோடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் நீதி கிடைக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீரவ் மோடியை இந்தியாவுக்கு ஒப்படைப்பதில் மனித உரிமைகளுக்கு இணங்குவதில் திருப்தி அடைகிறேன், அவர் இந்தியாவில் நடைபெறும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய வழக்கு வலுவானது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

நீரவ் மோடி
நீரவ் மோடி முறையான வியாபாரத்தில் ஈடுபட்டார் என்பதை நான் ஏற்கவில்லை. நான் உண்மையான பரிவர்த்தனைகளைக் காணவில்லை, நேர்மையற்ற ஒரு செயல்முறை இருப்பதாக நம்புகிறேன். வங்கி கடிதங்கள் பெறப்பட்ட விதம், "ஒட்டுமொத்த கலவையும், நீரவ் மோடியும் அவரின் சகாக்களும் மோசடியாக செயல்பட்டு வந்தனர் என்ற முடிவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
மும்பை ஆர்தர் சாலை சிறையில் நீரவ் மோடிக்கு போதுமான மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல பராமரிப்பு வழங்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார், நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பினால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அதே போல சாட்சியங்களை அழிக்கவும், சாட்சிகளை அச்சுறுத்தவும் நீரவ் மோடி சதி செய்ததாக இங்கிலாந்து நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும் இரு தரப்பும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்வதற்கு தடை இல்லை எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.