மே மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் மின்னெபோலிஸ் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் டெரிக் சாவின் என்ற வெள்ளை இனத்தைச் சேர்ந்த காவலரால் கழுத்தை அழுத்திக் கொல்லப்பட்டார். தனது முட்டியால் ஃபிளாய்டின் கழுத்தை காவலர் அழுத்திக்கொண்டிருக்க, தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஃபிளாய்ட் கூறிய இறுதி வார்த்தைகள் உலகத்தின் மனசாட்சியை இனவெறிக்கு எதிராக தட்டியெழுப்பியது.
அதைத்தொடர்ந்து, Black lives matter என்ற முழக்கத்தை முன்வைத்து இனவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், ஃபிளாய்ட் உயிரிழப்பதற்கு முன்னர் காவலர்களுக்கும் ஃபிளாய்டுக்கும் நடைபெற்ற உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.
காவலர்களின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் பதிவான ஆடியோவை குற்றம் சுமத்தப்பட்ட நான்கு காவலர்களில் ஒருவரான தாமஸ் லேன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், ஜார்ஜ் ஃபிளாய்ட் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று 20 முறை கூறியுள்ளது பதிவாகியுள்ளது. ஃபிளாய்டின் இந்த மரண ஓலத்தை சற்றும் பொருட்படுத்தாத காவலர் டெரிக் சாவின் அவரை வாயை மூடும்படி மிரட்டுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.
காவலர்கள், ஃபிளாய்டை தரையில் வீழ்த்தும் முன்னரே அவர், தனக்கு க்ளஸ்ட்ரோ ஃபோபியா இருப்பதாக, அதாவது நெரிசல் ஏற்பட்டால் மூச்சுத்திணறல் ஏற்படும் பிரச்னை இருப்பதாக அவர்களிடம் கூறுகிறார். ஆனால், அதையும் மீறி அவர் தரையில் வீழ்த்தப்படுகிறார். பிளாய்ட் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று கூறும்போது டெரிக் அவரை பேசாமல் இருக்கும்படியும், பேசினால், ஆக்சிஜன் அதிகம் செலவாகும் என்று திமிராக கூறுவதும் பதிவாகியுள்ளது.
Also see:
ஒருகட்டத்தில் தன்னால் இனியும் தாக்குபிடிக்க முடியாது என்பதை உணர்ந்த ஃபிளாய்ட், “அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். என் பிள்ளைகளை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று அவர்களிடம் சொல்லிவிடுங்கள். நான் போகிறேன்” என்று உருவாக்கமாகக் கூறுவது பதிவாகியுள்ளது.
ஃபிளாய்டின் சுவாசம் நின்றுபோனதை அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையிடம் தெரிவிப்பதும், காவலர் டெரிக் அதை உறுதி செய்வதும் பதிவாகியுள்ளது. அப்போதும் கூட ஃபிளாய்டின் கழுத்திலிருந்து டெரிக் தனது மூட்டை விலக்கவில்லை.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்த வீடியோக்கள் மூலமே ஃபிளாய்ட் மரணத்தில் இறுதி நிமிடங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் வெளியுலகிற்கு தெரியவந்தன. இந்நிலையில், காவல்துறையினரின் அதிகாரப்பூர்வமான வீடியோ அதை உறுதி செய்வதுடன், அந்த இறுதி நிமிடங்கள் மிகவும் கொடுமையாக இருந்ததை பதிவுசெய்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.