வடகொரியாவில் முன்னாள் அதிபர்களான கிம் இல் சங் மற்றும் கிம் ஜாங் இல் ஆகியோரின் உருவப்படங்கள் அகற்றப்பட்டிருப்பது கிம் ஜாங் உன் குறித்த சந்தேகங்களை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் தந்தை என்றழைக்கபடும் கிம் இல் சங்கின் பிறந்த நாளான ஏப்ரல் 15 அந்நாட்டின் முக்கிய தினங்களில் ஒன்றாகும். கடந்த ஏப்ரல் 15ம் தேதியன்று நடைபெற்ற கிம் இல் சங்கின் பிறந்த நாள் விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது. கடைசியாக ஏப்ரல் 11ம் தேதியன்று பொதுவெளியில் தோன்றிய கிம் ஜாங் உன் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் வெளியுலகின் பார்வையில் படாத நிலையில் அவர் இறந்து விட்டதாகவும், இதய அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததால் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் பரவின.
மே ஒன்றாம் தேதியன்று பியாங்யாங் அருகில் நடைபெற்ற உரத்தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிம். அது உண்மையான கிம் ஜாங் உன் இல்லையென்றும், அவரைப் போலவே தோற்றம் கொண்ட பாடி டபுள் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் உள்ள கிம் இல் சங் சதுக்கத்தில் கிம் இல் சங் மற்றும் கிம் ஜாங் இல் ஆகியோரது உருவப்படங்கள் திடீரென அகற்றப்பட்டிருப்பது புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அங்கு கிம்மின் படத்தை வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஊகங்கள் வலம் வருகின்றன. கடந்த 2012ம் ஆண்டுக்குப் பிறகு இந்த திடீரென படங்கள் மாற்றப்படுவதன் பின்னணி என்ன என்று உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த திங்களன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தின் படி, கிம் இல் சங் சதுக்கத்தில் உயர் அதிகாரிகள் அமர்ந்து ராணுவ அணிவகுப்பை பார்வையிடும் மாடம் இடிக்கப்பட்டுள்ளதாகவும், சதுக்கத்தின் மேற்குப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள தென்கொரிய ஊடகம் கிம் இல் சங் சதுக்கத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் 10ம் தேதியன்று வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சி 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதையொட்டி நடக்கும் விழாவுக்காக சதுக்கம் புனரமைக்கப்படலாம் என்று ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
ஒரு புறம் கிம்மின் இருப்பு பற்றிய சந்தேகங்கள் எழுந்து கொண்டிருக்க, மறுபுறம் அதிகாரத்தின் மீதான தன் பிடியை கிம் இறுக்கிக் கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கிம்மின் பாதுகாப்புப் படை தலைவரும், இராணுவ உளவுப்பிரிவின் தலைவரும் மாற்றப்பட்டுள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பது அந்நாட்டின் வார்த்தைகளில் சொல்லப்படும் வரை உண்மைகள் கூட ஊகங்களாகவே இருக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத நிதர்சனம்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.